தமிழ்நாட்டின் குமுதம் இதழிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தீபச்செல்வன்.
கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன்.
ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது.
இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன்.
இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்ற பயங்கரம் தான் மிகுந்திருக்கிறது.
எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு சகோதரி. அவர்கள் 1990 இல் இடம்பெயர்ந்திருந்தார்கள். பின்னர் 1996ம் இடம்பெயர்ந்து எங்களுடன் வந்திருந்திருந்தவர்கள்.
அந்த சகோதரியின் கணவன் 2001ல் நடைபெற்ற சமர் ஒன்றில் வீரமரணம் அடைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அவரை பார்த்த பொழுது பெரு அதிர்ச்சியே ஏற்பட்டது.
ஒரு கண்ணை இழந்து உடல் முழுவதும் பெருங் காயங்களுடன் மரத்தின் கீழாக சமைத்துக்கொண்டிருந்தார்.
கிடைத்த சில மரக்கறிகளையும் நிவாரணமாகத் தரப்பட்ட அரிசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த பெண் குழந்தையும், முதலில் பிறந்த பெண் குழந்தையும், இரண்டாவது கணவனும், சகோதரனும் இறுதி யுத்ததில் பலியாகியிருந்தார்கள்.
அவரது தலையுள்ளும் பீரங்கிச் சிதறு துண்டுகள் நுழைந்த நிலையில் எடுக்க முடியாதிருக்கின்றன.
மறதிகளும் அழுகைகளும் என்று இன்று தனித்துப்போயிருக்கிறார்.
சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர் சிதைந்து போன வீட்டை மீள பொறுக்கி கட்டிக்கொண்டிருக்கிறார்.
இதுவரையில் அவர் முகாமிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு வந்த அவர் மறுநாள் தடுப்பு முகாமுக்கு திரும்ப வேண்டும்.
தனக்கு கண்கள் வேண்டாம் என்று கூறிக்கொண்டேயிருந்தார்.
வாழ்வை தொடங்க வாழ பிடிப்பற்று பேசிக்கொண்டிருந்தார். தன் குழந்தைகளையும் பறிகொடுத்த வேதனையை சொல்லிக் கொண்டிருந்தார்.
நடந்து வரும் பொழுது மூத்த குழந்தை பீரங்கி குண்டு பட்டு அப்படியே இறந்து விழுந்து விட்டது எனவும் கடைசிக் குழந்தை காயத்துடன் தூக்கி வைத்திருந்த பொழுது கையிலேயே இறந்து விட்டது எனவும் சொல்லிக்கொண்டிருந்தார் அவரது தாயார்.
அந்த குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டேயிருந்தார்.
எந்த வருமானமும் அற்ற நிலையில் தந்த நிவாரணப் பொருட்களை அவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தந்த தகரங்களை ஒரு சில தடிகளில் பொருத்தி விட்டு இருக்கிறார்கள்.
எங்கும் பற்றைகள் தான் வளர்ந்து காடாகியுள்ளது. முகாமிலிருந்து கொண்டு வந்த சில பொருட்கள் வெளியில் கிடக்கின்றன.
வந்திருக்கும் மக்கள் எல்லோருமே கொண்டு வந்த பொருட்களை மரங்களின் கீழாகவும் தகரத்திற்கு கீழாகவும் போட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சமர்கள் நடந்த இடம் என்பதால் மண்மூடைகளும் மண் அரண்களும் எங்கும் கிடக்க குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது.
அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட முடியும்....? என்னுடன் வந்த கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த நண்பன் இவற்றையெல்லாம் எப்பொழுது உழுது விதைக்க முடியும் அதற்கு அனுமதி எப்பொழுது கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு வந்தான்.
வன்னி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள். கையில் பணம் இல்லை. விவசாய உபகணரங்கள் இல்லை. கைவிடப்பட்ட தொழிலை எப்படி தொடங்குவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீள திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர் மறைத்து அழித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவைகளை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு எடுத்துள்ளனர்.
எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
முழுக்க முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் வன்னி இருக்கிறது. அவர்களின் முழுப் பாவனையில் இருக்கிறது.
தமிழர்களின் நிலமை இப்படியிருக்க சிங்களவர்கள் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் வடக்கை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்களவர்களுக்கு வடக்கு, பார்க்கத் துடிக்கும் சுற்றாலாத் தளமாக தென்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி என்று எங்குமே சுற்றுலா வரும் சிங்களவர்களின் மயமாகவே இருக்கிறது.
சிங்களவர்கள் இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்ததில் சிதைந்த நிலத்தையும் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் தான்.
முழுக்க முழுக்க முப்பதாண்டு யுத்த சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படைகள் நிகழ்த்திய வீரதீரங்களைப் பார்க்கிறார்கள்.
அகதிகளாக அலையும் மக்களைப் பார்க்கிறார்கள். அங்கங்களை இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள்.
இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதூகலத்துடன் அவர்களின் படைகள் வரவேற்கின்றனர். சிங்கள மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் படைகளை சந்திக்கிறார்கள்.
அவர்கள் ஒரு பௌத்த நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள்.
அல்லது ஒரு சிங்கள நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு சிங்கள நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள்.
வன்னி நிலமெங்கும் புத்த சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள் தோறும் நடைபெறுகின்றன.
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி நிலத்தை கைபற்றிய உடனே இந்த புத்த சிலைகளை நாட்டுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
யாழ்ப்பாணம் நாகவிகாரை, நயினாதீவு விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள் சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலாத் தலங்களாக மாறியிருக்கின்றன.
எமது மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. அவர்களுக்கு வீடுகளும் இல்லை. சிதைந்து உருத்தெரிமல் கிடக்கிறது வாழ்வு. எப்படி எதை வைத்து தொடங்குவது என்று தெரியாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.
கால்வாசி மக்களை தவிர மீதி மக்கள் வன்னி நிலத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
தெரு ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தகரங்களை நிலத்தில் நட்டு அதற்குள் வாழ்கிறார்கள். புழுதியும் வெக்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை பயங்கரமானதாக தொடருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக