வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாக சிறிலங்கா அரசின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
“மீள்குடியமர்வை துரிதப்படுத்தும் நோக்கில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
கண்ணிவெடிகளில் சிக்கி அண்மைக்காலத்தில் 480 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஏழு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும், ஆயிரம் இராணுவ பொறியியலாளர்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள ஏ-9, பி-69, பி-35 ஆகிய வீதிகளின் இரு பக்கங்களிலும் இருந்த கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
கொக்காவில், கிளிநொசசி ஆகிய பகுதிகளிலும், பரந்தன் தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
183,219 இடம்பெயர்ந்த மக்கள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏனைய 84,700பேர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் விரைவில் மீளக்குடிமயர்த்தப்படுவர்.
இடம்பெயர்ந்தவர்களில் 29,000 பேர் முகாம்களுக்கு வெளியே சென்று தங்கியுள்ளனர். 54,000 பேர் மட்டும் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்” என்று இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கூறி வந்த சிறிலங்கா அரசாங்கம் திடீரென இப்போது அது முடிவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது.
இது தேர்தல் காலத்தந்திரம் என்றே கருதப்படுகிறது.
அத்துடன் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நேற்று தகவல் வெளியிட்ட போது மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதான வீதிகளின் இருபுறமும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் அந்த மூன்று வீதிகளில் இரண்டு வன்னிப் பகுதியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெயரிடப்பட்ட பி-69 வீதி எனப்படுவது, புவெலிக்கடவுக்கும் லெவெல்லவுக்கும் இடையிலான 1.3கி.மீற்றர் நீளமான வீதியாகும்.
அடுத்து பி-35 என்பது, படல்கும்புர - புத்தல - செல்லக்கதிர்காமம் வீதியாகும்.
இவை அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்டங்களில் உள்ளவை.
இராணுவப் பேச்சாளர் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை வெளிப்படுத்த முனைவதாகவே கருதப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த, வன்னில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் ‘சர்வத்ரா’ என்ற தொண்டர் நிறுவனத்தின் பேச்சாளர், கண்ணிவெடிகளை அகற்றும் தமது பணி அங்குலம் அங்குலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.
தினமும் 8 தொடக்கம் 10 வரையிலான சதுர மீற்றர் பரப்பளவுள்ள பிரதேசத்திலேயே சராசரியாகத் தம்மால் கண்ணிவெடிகளை அகற்ற முடிவதாகவும் அந்த அதகாரி கூறியிருந்தார்.
இந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவுக் கட்டத்தை நெருங்குவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
புதினப்பலகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக