இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 மார்ச், 2010

ஒபாமா திடீர் ரகசிய ஆப்கானிஸ்தான் பயணம்

காபூல்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றிரவு திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார்.

நேற்று முன் தினம் மேரிலாண்ட் சென்ற ஒபாமா அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு புறப்பட்டார். பாதுகாப்பு காரணங்களையொட்டி அவரது பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

காபூல் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மாளிகைக்குச் சென்றார்.

அவரது வருகை சில மணி நேரத்துக்கு முன்னர் தான் கர்சாய்க்கே தெரிவிக்கப்பட்டது.

கர்சாயை சந்தித்த ஒபாமா ஆப்கானிஸ்தானி்ல் தலைவிரித்தாடும் லஞ்ச- ஊழலை ஒழிக்கவும், போதை மருந்து கடத்தலை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பின்னர் அங்கேயே அமெரிக்க படை வீரர்களை சந்தித்துப் பேசிய ஒபாமா அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் இருந்து அமெரிக்கா கிளம்பினார்.

பதவியேற்ற பின் போர் பிராந்தியத்துக்கு ஒபாமா செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்பு ஈராக்குக்கும் இதே போல திடீரென ரகசிய பயணம் மேற்கொண்டார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமரை அவமானப்படுத்தினாரா ஒபாமா?:

இந் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஒபாமா அவமானப்படுத்திவிட்டதாக இஸ்ரேலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பாலஸ்தீனத்தில் தான் ஆக்கிரமித்துள்ள மேற்கு ஜெருசலேம் பகுதியில் யூதர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் சமீபத்தில் தொடங்கியது.

இத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடங்கி வைத்தார். இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில் இத் திட்டத்தை இஸ்ரேல் தொடங்கியதை அவர் கண்டித்தார்.

ஆனால் இந்த எதிர்ப்பை இஸ்ரேல் நிராகரித்தது.

இந் நிலையில் அமெரிக்கா சென்ற நெதன்யாகு, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரை ஒபாமா மிகக் கடுமையாக கண்டித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது இரு தலைவரும் போட்டோ எடுத்துக் கொள்ளும் சம்பிரதாயமும் நடைபெறவில்லை.

மேலும் ஒபாமா-நெதன்யாகு பேச்சு விவரங்களையும் பத்திரிகையாளர்களுக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் நெதன்யாகுவை ஒபாமா அவமானப்படுத்திவிட்டதாக இஸ்ரேலிய இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேல் எங்கள் நெருங்கிய நட்பு நாடு. நட்பு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. அதனால் தான் அவை தவிர்க்கப்பட்டன. மற்றபடி இஸ்ரேல் பிரதமர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதெல்லாம் தவறான பிரச்சாரம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக