இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 மார்ச், 2010

திலிபன் தமிழ் வீரத்தின் அடையாளம் – கண்மணி

பேயாட்டம் போடும் மகிந்தாவின் அரசுக்கு முடிவுரைக்கான காலம் இதோ நெருங்கிவிட்டது. துட்டகைமுனியின் தொடராய் மகிந்தாவின் அக்கிரமங்கள் இதோ அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இன விடுதலைக்கான சமர் முடிவுற்றதாய் முழுதாய் நம்பிக் கொண்டிருக்கும் இவர்களின் பகல் கனவு பரிதாபத்திற்குரிய தோல்வியை தழும் காலங்கள் இதோ, கணக்கு முடிவுக்காய் காத்திருக்கிறது.

எந்த ஒரு தொடக்கமும் அழிவிலிருந்தே துளிர்கிறது என்கின்ற தத்துவம் தமிழீழ வரலாற்றிலும் முற்றிலும் முழுதுமாய் மெய்யாகிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு அரக்கனும் செய்யாத கொடுஞ்செயலை மகிந்தா அரசு செய்து முடித்தப்பின், இன்னமும் அது தமக்கான கணக்கை தாமே முடித்துக் கொள்ள, தனித்துவம் வாய்ந்த தமிழரின் வரலாற்றை அழிக்க முயற்சிப்பதிலிருந்தே சிங்கள பேரினவாத பெருங்கொடுமை, அழிவை நோக்கி விழத் தொடங்கிவிட்டது என்பதை மகிந்தா அரசு செய்யும் ஒவ்வொரு செயலும் மறுபடியும், மறுபடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசு தமது வக்கிர கொடுமையை, தமது பார்ப்பனிய அடையாளத்தை, துரோகத்தின் முகத்தை தமிழீழ மண்ணில் காட்டியபோது இந்திய தேசத்தின் இதிகாசமாய் போற்றப்படும் காந்தியின் வழியிலேயே ஒரு சூரியன் அந்த மண்ணிலே தோன்றினான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சொந்த மண்ணின் விடுதலைக்காய் அந்த மண்ணின் இரும்பு மனதை இருக்கும் எல்லோருக்கும் அவன் அடையாளம் காட்டினான். சொட்டுத் தண்ணீர் தொண்டை குழிக்குள் இறங்காமல், பேரினவாத அடங்காபிடாரி தனத்தை அறிவிக்க, துரோக முகமூடியை கிழித்தெறிய, தம்மையே தனலாக்கி தமிழ்மேல் கொண்ட பற்றை தன் மக்கள் மீது கொண்ட அன்பை, தமது இனத்தை காக்க எடுத்த முடிவை துளிகூட சிதைவுறச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் தமது உடலின் அணுக்களை சிதைத்துக் கொண்டு மடிந்துபோனான். போனது அவனது உடல்மட்டும்தான். அவன் உயிர் அந்த ஈழ மண்ணின் வாசத்தை இன்னமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருநாளும் தமிழீழ விடுதலைக்கான துளியாய் அவன் அந்த மண்ணிலே சுழன்று சுழன்று வீசிக் கொண்டுதான் இருக்கிறான்.

எந்த நாடு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தம்மையே வறுத்திக் கொண்டு, விடுதலைப்பெற முடியும் என்று எடுத்தியம்பியதோ, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டத்தின் மகத்துவத்தை, அந்த போராட்டத்தின் மாட்சிமையை, அந்த போர் வடிவத்தின் உள்ளடக்கத்தை, அதில் புதைந்துள்ள உன்னதத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொன்னான். தமது தலைவனை தாயாக பாவித்து தேசிய தலைவனின் அரவணைப்பில் அவன் மகிழ்ந்து இறந்துபோனான். அடடா… இதுவல்லவா தியாகம். புலிகள் என்றால் கருவி ஏந்தி களத்தில் இருப்பவர்கள் என்கின்ற அவதூறை எடுத்து அகற்றி, தம்மையே அழித்துக் கொள்ளும் ஆளுமை படைத்தவர்கள். கொண்ட லட்சியத்தை காட்டி காக்க தொடர்ந்து இயங்கும் போராட்டத்தின் வடிவங்கள் என்பதை உலக அரங்கிற்கு உணர்த்தியவன், திலிபன். இந்த உலகம் பல்வேறு களப்போர்களை கண்டறிவதற்கு காரணமாய் திகழ்ந்த மாமனிதன், புலிகளின் போர்ப்படைத் தலைவன், தமிழர்களின் வரலாற்றிற்கு சான்று பகர்ந்தவன், சான்றோன் எமது தேசிய தலைவனின் அடலேறு, அசைக்கமுடியாத, ஆளுமை வாய்ந்த, அளவிட முடியாத, உறுதிகொண்ட, எவரும் எதிர்பாராத, எளிமையான தியாகி திலிபன். அவன் இறந்தபோது, இந்த உலகமே தமிழீழ மண்ணை நோக்கி திரும்பி பார்த்தது.

தமிழீழ போராட்ட வரலாற்றை திசை மாற்றிய மரணம் அது. தமிழீழ போராட்டத்தின் வடிவங்களை உலகிற்கு வரிவரியாய் சொன்ன வரலாற்று வடிவங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியவன் திலிபன். தம்மை அழித்துக் கொள்வதின் மூலம் இந்த மண்ணின் விடுதலை உறுதியானது என்றால், இன்னும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தம்மை அழித்துக் கொள்வதற்கு தரணியெங்கும் காத்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தியவன் திலிபன். தமிழீழ மண்ணிற்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் ஆற்றல் வாய்ந்த வீரன் திலிபன். அவன் விட்ட இடத்திலிருந்துதான் தமிழீழ போராட்ட வரலாறு மீண்டுமாய் தொடங்கியது. அந்த மாவீரனின் ஈகப்போராட்டம்தான், மரணத்தின் மீது இருந்த அச்சத்தை போக்கியது. திலிபனின் தியாக மரணமே கரும்புலிகளை படைத்தளிக்க காரணமானது. அந்த திலிபன் உருவமாய் இருக்கிறான் என, மகிந்தா மமதையோடு எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் திலிபன் காற்றிலே கலந்திருக்கிறார். மரங்களின் அசைவிலே அவனின் நிகழ்வுகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஈழ மண்ணின் துகள்கள் அவனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

பிறந்த குழந்தைகள் எல்லாம் திலிபனை தமது உறவாகக் கொண்டாட தொடங்கிவிட்டது. பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் அவன் வீரத்தின் பிறப்பிடமாய் இருக்கப் போகிறான். அழிப்பது என்பது தம்மை அழித்துக் கொள்வதற்கு சமமானது என்பதை மகிந்தாவின் சகோதரர்கள் ஏனோ புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இட்லரை விடவா? ஆனால் இட்லருக்கு ஏற்பட்டதை விட இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் அழிவை மகிந்தா இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே தரப்போகிறான் என்பதைதான் இப்பொழுது இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் சான்று பகிர்ந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பானம். தமிழீழ வரலாற்றுக்கல்ல, தமிழ் வரலாற்றிற்கே சான்று பகர்ந்த இடம். யாழ்பானத்தின் தமிழ், இந்த உலகத்தின் மூளை முடுக்கெல்லாம் கொடி கட்டிய குலத்தை அறிமுகப்படுத்தியது. அங்கேதான் நமது எண்ணங்கள் நிறைந்த தியாகி திலிபனுக்கு சிலை வைக்கப்பட்டது. இது, தமிழ்நாட்டில் வைக்கப்படும் போற்றுவதற்கான சிலை அல்ல, இது உலக இளைஞர்களுக்கு வீரத்தை அடையாளம் காட்ட வைக்கப்பட்ட சிலை. வீர மறவர்களின் வாழ்வுக்கு விளை நிலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிலை.

நல்லூரில் பருத்தித்துறை வீதியில் அமைந்த திலிபனின் சிலையை, சிலை என்று சொல்வதுகூட சரியானதல்ல, தமிழீழ மக்களின் அடையாளத்தை அதையும் தாண்டி உலகத் தமிழர்களின் ஆன்மாவாகத் திகழ்ந்த அந்த உருவத்தை நள்ளிரவில், அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொருக்கியதாக செய்தி கேட்டு நொருங்கிபோனது தமிழ்பாய்ந்த ரத்தங்களெல்லாம். அடித்து நொருக்கியது திலிபனின் சிலையல்ல, தமிழரின் இதயங்களை. அடித்து நொருக்கப்பட்டது அவனின் உருவ பொம்மையை அல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தை. மீண்டுமாய் அவன் இறப்பிலிருந்து தோன்றிய தமிழீழ போராட்டம், அவன் சிலையின் வீழ்ச்சியிலிருந்து மறுபிறப்பெடுக்கும் என்பதை உறுதிபடுத்தியது இந்த நிகழ்வு. தமிழீழத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் சேர்த்து இன்று இடைவிடாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புரைக்கு இந்த தியாகியின் உருவம் இடையூறாக இருக்குமோ? என்று அஞ்சிய கயவர்கள் யாரோ, கைத்தடி எடுத்து உயிரற்ற அந்த உருவத்தின்மீது எறிந்திருக்கிறார்கள்.

இதில் புதைந்துள்ள கேவலமான அரசியல், உலக அரங்கில் அவலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவனின் சிலை தமது அரசியல் வாழ்வுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துவிடுமோ என்கின்ற எண்ணத்தில் சிலையை ஒழித்துவிட்டு, தம்மை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என யாரோ செய்த இந்த அவலச் செயல், மனித பண்பாட்டை மீண்டுமாய் ஒருமுறை கொலை செய்திருக்கிறது. மாந்த நாகரீகத்தை கொத்துக் குண்டுகளால் அழித்தொழித்த மகிந்தாவின் அடையாளம், மறுபடியும் விழித்தெழுந்ததை காணமுடிகிறது. அந்த மாபெரும் மனிதனின் நினைவுத்தூணை அழித்தொழித்து, திலிபனையே அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள் தனமான சிந்தனைக்கு எதிர்சமராய் விழித்தெழ இருக்கும் தமிழீழ போராட்டத்தின் அடுத்த நகர்வு, இந்த துரோகிகளுக்கு நிச்சயமாய் வீழ்ச்சியாகவே அமையப்போகிறது. அந்த மாமனிதனின் சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் எந்த நிலையிலும் அவனின் லட்சியத்தை, அவன் தம் மக்களின்மீதும், தமது இனத்தின்மீதும் கொண்ட தாகத்தை, அதை அடைவதற்காக தேர்வு செய்த பாதையை, கொஞ்சமும் குறைத்து மதிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும்.

அவர்களுக்குள் இருப்பதெல்லாம் திலிபனின் சிலையை உடைத்தால் தமிழரின் மனங்களிலுள்ள திலிபனின் பெயரை மறைத்துவிடலாம் என்கின்ற முட்டாள்தனமான சிந்தனைதான். ஆனால் சிலையை தாண்டி, அவன் இந்த தமிழ் சமுதாயத்தின் உயிரோட்டமாய் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்கின்ற அடிப்படை உண்மைகூட இந்த கயவாலிகளுக்கு தெரியவில்லையே என்று நினைக்கும்போது நகைப்பதா? வியப்பதா? எனப்புரியவில்லை. உலக வரலாற்றில் போர் காலங்களில் சரணடைவோர்களையும், கைதுசெய்வோர்களையும் நடத்தவேண்டிய வழிமுறைகள் அகில உலக போர்முறைகளின் சட்டதிட்டங்களின்படி, எல்லா போர்களங்களிலும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையிலே மகிந்தாவின் சிங்கள பேரினவாத அரசு, சரணடைய வந்த தமிழ்போராளிகள் மரபு மீறி சுட்டுக் கொன்றது. சரணடைந்த போராளிகளை கீழ்த்தரமாய் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆக, உலக வரலாற்றின் நடைமுறை என்பதும், மாந்தகுல மாண்பு என்பதும் இந்த மகிந்தாவிற்கு இப்போது விளங்காது. அதன் தொடக்கமாகத்தான் சிலைகளை உடைப்பதின் மூலம் தம்மை சிறுமைப்படுத்திக் கொள்ள தயாராகிவிட்டார்.

தமிழீழ அடையாளத்திற்காய் தம்மையே ஒப்படைத்த மாபெரும் போராளிகளுக்கு துயிலும் இல்லங்கள் தூய்மையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத மகிந்தா, மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தெறிந்து தமது ஆணவ முகத்தை அடையாளப்படுத்தினார். உலகிலே வேறெங்கும் கல்லறைகளை உடைத்து போராளிகளின் உடலை வீசி எறிந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அப்படி ஒரு கேடு செயலை தொடர்ந்து தமிழீழ மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள பாசிச அரசு, இப்போது தமிழர்களின் அடையாளங்களை அழிக்க தொடங்கியிருக்கிறது. அதன் முதல் படிதான், திலிபனின் சிலை உடைக்கப்பட்டது. ஒன்றுமட்டும் மகிந்தாவிற்கு புரியவேண்டும். இந்த பூமி சுழலும் தன்மை கொண்டது. எங்கு தொடங்கியதோ, அங்கேதான் மீண்டும் நிறைவு காணும். தமிழீழ போராட்டம் எங்கு தொடங்கியதோ, அங்கேதான் மீண்டும் தொடங்கப்போகிறது என்பதை குறியீடாகத்தான், திலிபனின் சிலை உடைப்பு நமக்கு குறித்துக் காட்டுகிறது. துட்டகைமுனு உலக அரங்கில் இதுவரை யாராலும் உச்சரிக்கப்படாத பெயராக மறக்கடிக்கப்பட்டான். ஆனால் எல்லாளன் மீண்டுமாய் உயிர்பெற்று உலக அரங்கிலே தமிழனுக்கான அடையாளத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்.

இனி துட்டகைமுனு வந்த அதே சமாதிதான் மகிந்தாவிற்கும் அருகே இருக்கிறது. மறந்துவிட வேண்டாம், தமிழனை அழிக்க நினைத்தவர்களெல்லாம் அழிந்து போனார்கள் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மையாகும். குறியீடாய், குலக்கொடியாய் நம்முடைய உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் திலிபனின் வீரச்செயல்களை நினைத்துபோற்ற வாய்ப்பளித்த மகிந்தாவிற்கு நாம் மறுபடியும் நன்றி சொல்கிறோம். திலிபன் வெறும் சிலையல்ல, அவன் தமிழ் விடுதலையின் குறியீடு. திலிபன் வெறும் பெயரல்ல, அவன் தமிழர் வீரத்தின் அடையாளம். இதை மகிந்தாவிற்கு சிங்களத்தில் யாராவது மொழி பெயர்த்து சொல்லுங்கள்.

http://meenakam.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக