யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், தியாகி திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'ஈழமுரசு' பத்திரிகை வெளியிட்டுள்ள
செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது.
குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன.
தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர்.
இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார்.இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது.
திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக