வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது.
தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதித்தோம். ஒரு நாளா? இரு நாளா? முப்பது ஆண்டு காலம் எமது தேசத்தை முன்னிருத்தி அதை கட்டிக் காக்கும் சமரிலே தமது உடலை, உயிரை குறித்து துளியேனும் வருத்தமின்றி, துள்ளிகுதித்து களத்திற்கு சென்ற என் கண்மணிகள் இன்று எங்கே? மனதிற்குள்ளே மழை பெய்கிறது. அது கண்ணீர் மழை. குருதி மழை. குற்ற உணர்வு குடைந்தெடுக்கிறது. எந்த காவியத்தை எமது கண் முன்னால் கண்டோமோ, அந்த காவியத் தனல்கள் இதோ, இன்று சிங்களனின் வேட்டைக்காடாய் உருமாறி இருக்கிறது.
நம்மை கண்டு அஞ்சி, நடுங்கி ஓடிய சிங்கள நாய்கள், எமது புலிகளை அடிமையாய் வைத்திருக்கிறது. வரிப்புலிகளாய் களத்திலே வீறுகொண்டு எழுந்த அந்த வரலாற்று வரிகள் இன்று சிங்கள காடைகளின் முன்னால் புழுதியாய் அடைக்கப்பட்டிருக்கிறது. வீர வித்துக்களாய், தமது தேசத்திற்காக புதைந்து போக முனைந்த புலிகளின் கூட்டம் சிறப்பு பாதுகாப்பு சிறை என்னும் அடக்குமுறை கொட்டடியில் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஓங்கி அறைந்து எமது தேசத்தின் குரலை எதிரொலித்த அந்த வீர வரலாறுகள் இன்று தமது உடலையும், மனதையும் எப்படி தேற்றிக் கொள்வதென்று தெரியாமல் முடங்கி, ஒடுங்கி போயிருக்கிறது.
என்ன பாவம் செய்தார்கள்? கொள்ளை அடித்தார்களா? கொலை செய்தார்களா? மோசடி செய்தார்களா? அல்லது நாட்டை சுரண்டினார்களா? பெண்கள் மீது பாலியல் வக்கிரங்களை கட்டவிழ்த்தார்களா? என்ன காரணம்? என்னத்தான் காரணம்? சிந்திக்கும்போதே நம்முடைய எண்ணங்கள் சிதறிபோகிறது. வண்ணமயமான தமிழீழத்தை, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாட்டை, தமிழனுக்கான ஒரு மண்ணை, தமிழரின் மானத்தை, தமிழனின் கோட்டையை, சிங்கள காடையர்களுக்கு முன்னால் கட்டி எழுப்ப வேண்டும் என்ற வேட்கை உங்களையும் என்னையும் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருந்ததே, அதுதானே அவர்கள் செய்த பாவம்.
இந்த மண்ணிற்காக, மானத்திற்காக, செத்துப் போக தயாராக தமது உடலிலே குண்டுகளை கட்டிக் கொண்டு, காற்றிலே சிதறிப்போக சித்தமாய் இருந்தார்களே சிரித்த முகத்தோடு, இதுதானே அவர்கள் செய்த துரோகம். அட தமிழகமே! தமிழ் நாடே! தமிழரின் பெயர் காக்க, தமிழ் மண்ணின் வீரம் காக்க, தம்மையே இழப்பதற்கு துணிந்த அந்த போராளிகள், இன்று துப்பாக்கி முனையிலே அடிமைகளாய், அடக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களே. அதைக்குறித்த உமது விமர்சனம் தான் என்ன? உனக்காகவும் எனக்காகவும் தானே அவர்கள் உறுதியோடு களம் கண்டார்கள்.
உனது குழந்தையும், எனது குழந்தையும் மகிழ்ச்சியோடு விடுதலை காற்றை சுவாசிக்க வேண்டும் என்றுதானே அவர்கள் தமது உயிர்காற்றை நிறுத்திக் கொள்ள துணிந்து வந்தார்கள். அதற்காகத்தானே இன்று அவர்கள் அந்த சிங்கள அடிமைகளாய் சிறைகளிலே துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க நீயும், நானும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நன்றி கெட்டத்தனமாய் இன்னமும்கூட நாம் கடந்த காலங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும், நிகழ்கால மகிழ்விலே கரைந்து போவதுமாய் நமது வாழ்வு நகர்வதை நினைத்தால் கனத்துப்போகிறது மனம். என்ன பாடுபடுகிறார்களோ, எத்தனை முறை அந்த சிங்கள நாய்கள் எமது வீரப் புலிகளை அடித்து துன்புறுத்துகிறார்களோ, புலிகளின் ரத்தம் அந்த தரைகளை எப்படி நனைத்து அழுகிறதோ, அய்யகோ! நினைப்பதற்கே வேதனையாக இருக்கிறது.
நீயும் நானும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நீங்கா துயரை அவர்கள் மகிழ்வோடு ஏற்றார்கள். உன் துயர், என் துயர் போக்க களம் கண்ட அந்த மாமனிதர்களின் துயர் நீக்க, நீயும் நானும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்த்தோமா? அவர்கள் தமது மக்களின் நல்வாழ்வு ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்தவர்கள் அல்லவா? தமது தேசத்தின் மானம் ஒன்றே பெரிதென்று எண்ணியவர்கள் அல்லவா? அந்த வீர வரிப்புலிகளின் வரலாறு சிங்கள துப்பாக்கிகளுக்கு முன்னால் துவண்டு கிடக்கிறது. எது நடக்கக் கூடாது என்பதற்காக எமது தேசிய தலைவர் களம் அமைத்தாரோ, இதோ அது அவரது கண்முன்னாலேயே நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்கக் கூடாது என்பதற்காக பெண்களை சீருடை அணிய வைத்தாரோ, இதோ அது அவர் வாழும் காலத்திலேயே நடக்கிறது. நினைவுகளை மட்டுமல்ல, நிம்மதியிழந்து தவிக்கிறோம். திறந்த வெளி முகாமிலே எமது மக்களின் வாழ்வு, பிச்சைக்காரர்களைவிட கேவலமாக நிகழ்ந்து கொண்டிருந்ததை நினைத்து நினைத்து கதறினோம். நீங்காதா இந்த துயர் என்று நாம் மனங்களை அந்த மண் மேட்டை நோக்கி திரும்ப செய்தோம். ஆனால் நாம் விரும்பியது எதுவுமே நடக்கவில்லை. சிங்களன் தொடர்ந்து நம்மை சிறுமைபடுத்திக் கொண்டிருக்கின்றான். நமது வாழ்வின் வளமும், நமது சொல்லின் குணமும், அதோ அங்கே முடக்கப்படுகிறது.
இங்கு தமிழ் பேசுகிறாய், தமிழ் தேசியம் பேசுகிறாய், தமிழரின் வாழ்வு பேசுகிறாய், தமிழரின் நிலை உயர்வுக்காய் நீ-நான் என மேடை போட்டு குரல் எழுப்புகிறாய். எம் வீரப்புலிகளின் குரல்வலை முறிக்கப்படுகிறதே, அதை குறித்த கவலை, அதை குறித்த அக்கறை, நமக்குள் எப்போது எழும். எதை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாம் வீறுகொண்டு எழுந்தோமோ அது நம்மை வீழ்த்தி வெற்றி கொடி கட்டியிருக்கிறது. எதை ஒழிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்தோமோ, அது நம்மை ஒழித்துவிட்டு அகங்காரமாய் சிரிக்கிறது. ஆனால் இன்னமும் நமக்குள் ஒருமை இல்லை. இன்னமும் நமக்குள் இணைவு இல்லை.
ஆளாளுக்கு ஒரு அரசியல், அரசியலுக்கு ஒரு கூட்டணி, ஆனமட்டும் நமது தன்னலத்தை உயர்த்திக்கொள்ள இடைத்தேர்தல்களில் மூழ்கி இருக்கிறோம். தமிழ் தேசியம் என்பது நமக்கு ஊறுகாயாகி விட்டது. தமிழரின் வாழ்வும், தமிழனின் மானமும் நமக்கு சோறு அல்ல. அது சுவைக்க குடிக்கும் பானமாகி விட்டது. நம்மை நாம் இழந்து விட்டோம். நமக்கான அடையாளத்தை, நமக்கான உணர்வை நமது எண்ணங்களை நாம் அந்த முள்ளி வாய்க்காலிலே போட்டு புதைத்துவிட்டோம். நமக்குள் இருந்த நம்பிக்கை நமுத்துப் போய் விட்டது.
நாம் நம்மை நினைத்தே கேவலப்பட்டுவிட்டோம். நமது கோபமெல்லாம் கொன்றொழிக்கப்பட்டுவிட்டது. நமது வீரமெல்லாம் செத்து போய்விட்டது. இல்லையெனில் கொத்து கொத்தாய் எமது குல கொடிகள் சிங்கள அடிமைகளாய் இருக்க நாம் மட்டும் சுக வாழ்வு வாழ எப்படி மனம் வரும்? நம்மால் எப்படி உறங்க முடிகிறது? எப்படி குடிக்க முடிகிறது? நம்மால் எப்படி சிரிக்க முடிகிறது? நாம் சிறுமைபடக்கூடாது என்பதற்காக தமது உயிர், பொருள் அனைத்தும் ஈகப்பொருளாய் அடகு வைத்த அந்த எம் குலக் கொழுந்துகள் அடிமைகளாய் இருக்கும் போது, நாம் எங்கிருந்து விடுதலை காற்றை உணர முடியும். புரியவில்லை.
இது எதற்கான தொடக்கம் என்பது, இன்னமும் விளங்கவில்லை. எமது தேசம் மட்டுமல்ல, எமது மானமும் அடகு போய்விட்டது. எமது வீரமும் அடகுபோய்விட்டது. அன்னியனிடம் மண்டியிட முடியாது என்பதற்காகத்தானே அவன் எல்லாளனாய், எரிதழலாய் எழுந்து நின்றான். எமது தேசத்தை விடுதலை உணர்வோடு வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை காடுகளிலும், தமது வாழ்வின் சுகங்களை ஈகத்திலும் செலவழித்தான். உலகெங்கும் வாழும் தமிழனுக்கு தலைசாய்க்க இடம் வேண்டும் என்பதற்காகத்தானே தான் ஒருபோதும் தலை சாய்க்காமல் உழைத்து உழைத்து நம்மையெல்லாம் ஒருங்கிணைத்தான்.
அந்த தேசிய தலைவனின் எண்ணங்களை, அவரின் ஏற்றமிகு சிந்தனைகளை, நமது விடுதலைக்கான உணர்வுகளை நாம் உணர்ந்தவர்களாய், அதற்கு உயிர் கொடுப்பவர்களாய், உறங்காமல் உழைக்க வேண்டிய இந்த தருணத்தில் நமது நிலைகளை மறந்து, நமது நினைவுகளை இழந்து, தன்னலமாய் அணி அணியாய் பிரிந்து களத்திலே இருக்கிறோம். இது மேலும் நமது இனத்திலிருந்து நம்மை அந்நியப்படவே செய்யுமே தவிர, நிச்சயமாய் அது நம்மை காக்கும் களமாகாது. இப்போது நமது முதல் பணி, எமது குலக் கொழுந்துகளை அந்த அடிமை கொட்டடியிலிருந்து மீட்டெடுப்பது. அதற்கான அரசியல் நகர்வுகள் என்ன என்பதை சிந்திப்பது.
தேர்தலால் நாம் சாதிக்க முடியாது என தெரிந்திருந்தும்கூட, களத்திலே நாம் வாக்கு சேகரிக்க வலம் வருவதிலிருந்து விலகி, நமது தேச விடுதலைக்கான போராளிகளை விடுவிக்க என்ன செய்யலாம் என்பதை சிந்திக்கும் காலத்தில், கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதை நாம் நாளை, அல்லது மறுநாள் என்று தள்ளிப்போட முடியாது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எமது தேசப் போராளி குருதி குளத்திலே அங்கே செத்துக் கொண்டிருப்பான். நாம் நாளை என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது பெண் புலி, அங்கே சிங்களின் வேட்டை ஆடாய் சிக்கி, சீரழிந்து கொண்டிருப்பாள். எமது தங்கைகள், எமது சகோதரிகள், எமது தேசத்தை விடுவிக்க வேண்டும் என்கிற எழுச்சிமிக்க எண்ணத்தை தவிர, வேறு என்ன அவர்கள் விரும்பினார்கள். உங்களையும் என்னையும் காட்டிலும் அவர்கள் கூடுதலாக இந்த மண்ணையும், இந்த மண்ணின் மானத்தையும் நேசித்தார்களே, அதற்கான பரிசைத்தான் அவர்கள் இப்போது சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை விடுவிக்க, அவர்களை காப்பாற்ற, இவர்களை தலைமேல் சுமக்க, தமிழர்கள் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவனும் தவறுவானேயானால் நிச்சயமாக இந்த வரலாறு அல்ல, எந்த ஒரு வரலாறும் நம்மை மன்னிக்காது. நாம் இப்போது களத்தில் இருப்பது புலிகளை விடுவிக்க. நமது தேசத்தின் பேராளிகளை விடுதலை உணர்வோடு வாழ வைக்க. உடனே களம் காண்போம். நமக்கு உயிர் கொடை தந்த அந்த மாவீரர்களின் மனங்களை குளிரச் செய்ய நமக்கு இது காலம் கொடுத்த அருட்கொடை. மாற்றமில்லாமல், மனம் மாறாமல் உடனே வருவோம். வாருங்கள். மீட்டெடுப்போம் எமது களப்போராளிகளை.
http://www.eelamwebsite.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக