இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜனவரி, 2010

உயர்பாதுகாப்பு வலயம் "இருக்காது ஆனா இருக்கும்" :மகிந்த காமடி

யாழ்ப்பாணம் சென்ற மகிந்த இன்று துரையப்பா திறந்தவெளி அரங்கில் மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் எனபதுபோல சூசகமாகக் கூறி, பின்னர் அங்கு இராணுவத்தினர் நிலைகொள்வர் எனவும், பாதுகாப்பு அரண் அகற்றப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார். அதாவது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள, மற்றும் பாதுகாப்பு அரண் ஸ்தாபிக்கப்பட்டு அங்கு மக்கள் செல்லமுடியாத இடத்தையே நாம் உயர் பாதுகாப்பு வலயம் என்கிறோம், ஆனால் இவர் இதற்கு புது விளக்கம் சொல்கிறார்.

அதாவது இவர் பாஷையில் உயர்பாதுகாப்பு வலயம் இருக்காது ஆனா இருக்கும்!

சில இடங்களில் மட்டும் தொடர் காவலரண்கள் உடைக்கப்படுகின்றன. வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு, அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கிறது.

இரண்டு பிரதான அரச தலைவர் வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்பானது குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேதான் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களது வாக்குகளை கவரும் நோக்கில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றி எந்தவொரு வேட்பாளரும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் இறப்பை ஒரு அரசியல் காய்நகர்த்தலாக பயன்படுத்தும் சிலரை நாம் அறிவோம். அவர் நல்லடக்கத்திற்கு உதவியதற்காக நன்றி சொல்லலாம், ஆனால் அதற்காக தமிழர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இருக்காது. தமிழீழ தேசிய விழுமியங்களுடன் கூடிய அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இறுதிவரை போராட்டம் தொடரும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக