இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஜனவரி, 2010

பிரபாகரன் உடல்' பற்றிய தொழில்நுட்பத்தை ராஜபக்சேவிடம்தான் கேட்க வேண்டும்!- புலிகள் கிண்டல்

கொழும்பு: சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பில் பலத்த சந்தேகங்கல் எழுப்பப்பட்டன. அனைவரது சந்தேகத்துக்கும் விடையாக, புலிகளின் செய்தித் தொடர்பாளரே இப்போது பேட்டி அளித்துள்ளார்.

பிரகாரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டியது பற்றிய கேள்விக்கு, அந்த உடல் 'செய்யப்பட்ட' அதீத தொழில்நுட்பம் பற்றி ராஜபக்சே அல்லது பொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூனியர் விகடனில் வந்துள்ள தமிழ்மாறனின் பேட்டி:

"புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?"

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''

''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''

''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம்.

இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''

''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''

''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''

''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''

''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''

''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டிருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப்பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''

''இது மக்கள் விடுதலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்களின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்காவிட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''.

இவ்வாறு கூறியுள்ளார் தமிழ்மாறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக