V
பெங்களூர்: முன்பெல்லாம் கொஞ்சம் வசதியானவர்கள் தனக்கென்று ஒரு கணக்குப் பிள்ளை வைத்துக் கொள்வார்கள். இப்போது அப்படி வைத்துக் கொண்டால், கணக்குப் பிள்ளைக்கு சம்பளம் தரவே தனியாக ஓவர்டைம் பார்க்க வேண்டி வரும், வேலையாக இருந்தாலும், பிஸினஸாக இருந்தாலும்.
இதற்கு ஒரு தீர்வை தந்துள்ளது இன்டியூட் நிறுவனம். அதுதான் நிதி நிர்வாக சாஃப்ட்வேர் (நிதி மேலாண்மை மென்பொருள்).
இணையதளம் சார்ந்து இயங்கும் இந்த மென்பொருளுக்கு இன்டியூட் மணி மேனேஜர் (Intuit Money Manager) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனி நபர் நிதி நிர்வாகத்தைச் சிறப்பாகக் கையாள இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருள் மூலம் ஒருவர் தனது நிதியை எப்படிச் செலவழிக்கலாம், நிதி ஆதாரங்களை எப்படிப் பெருக்கலாம் என்பதை ஜஸ்ட் ஒரே வாரத்தில் முடிவு செய்துவிட முடியும். எத்தனை வங்கிகளில் உங்களுக்கு கணக்குகள் இருந்தாலும் அல்லது எத்தனை நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாலும், இந்தக் கருவியின் மூலம் எளிதில் அவற்றை நிர்வகிக்க முடியும்.
நேரம், பணம் இரண்டையும் மிச்சப்படுத்த இது மிகச் சிறந்த கருவி என முதலீட்டாளர்கள் மெச்சும் அளவுக்கு உள்ளது இந்த 'மணி மேனேஜர்'.
எப்படிப் பெறுவது?:
ரொம்ப சிம்பிள்... Moneycontrol.com எனும் இணைய தளத்துக்குள் நுழைந்தால், அவர்களே உங்கள் மவுஸைப் பிடித்து இழுத்துப் போய் தேவையான வழியைக் காட்டுவார்கள்! கூடவே இந்த மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 90 நாட்கள் ட்ரையல் பார்க்கவும் அனுமதிக்கிறார்கள். அதில் திருப்தி இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து இன்டியூட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உமங் பேடி கூறுகையில், "ஒவ்வொரு தனிநபரும் -அவர்கள் முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, மாதச் சம்பளதாரராக இருந்தாலும் சரி- இந்த நிதி மேலாண்மை சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இருக்கிற நிதியை சிறப்பாகக் கையாளவும், எதிர்கால நிதி ஆதாரங்களைப் பெருக்கவும், ஏற்கெனவே நிதி கையாளுகையில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் இந்த சாஃப்ட்வேர் முழுமையாக உதவுகிறது.
இந்த மென்பொருளைப் பயன்படுத்திய 85 சதவிகிதத்தினர், இதை உடனடியாக மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைக்கிறது..." என்கிறார்.
நம்பிக்கைக்குரிய உதவியாளர்...:
இன்டியூட் இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் விட்டல் அனந்த்குமார் இப்படிச் சொல்கிறார்:
"பெயர்தான் நிதி நிர்வாக மேலாளரே தவிர, இந்த சாஃப்ட்வேர் உண்மையில் ஒரு நம்பிக்கையான உதவியாளர் (அதான் கணக்குப் பிள்ளை.. நாம சொன்னது சரியாப் போச்சா!) என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே எந்த அளவு பணம் வைத்திருக்கிறோம் என்று சிலருக்கு நினைவே இருக்காது. கட்ட வேண்டிய தவணைகள் மறந்து போகும்... வாங்க வேண்டிய காசோலைகள் மறந்திருக்கலாம்... தனிப்பட்ட முறையில் கொடுக்கல் வாங்கல் பல நேரங்களில் மறந்து போகும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு... இதற்கெல்லாம் 'ஒன் க்ளிக் சொல்யூஷன்'தான் இந்த இன்டியூட் மணி மேனேஜர்" என்கிறார்.
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, எஸ்பீஐ போன்ற வங்கிகளுடன் இணைந்து செயல்படும் அளவு இந்த இன்டியூட் மணி மேனேஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை...
முதல் 90 நாட்களுக்கு ட்ரையல் முறையில் இந்த சாஃப்ட்வேரை இலவசமாகத் தருகிறார்கள். அதன்பிறகு ஒரு நாளைக்கு ரூ 1 என்ற கட்டணத்தில் இந்த மென்பொருள் கிடைக்கும்.
இன்டியூட் இன்கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் வர்த்தக சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தரும் ஒரு நிறுவனம். தேசிய வங்கிகள், மேலாண்மை நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்ளாக உள்ளன.
1983ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், குயிக் புக்ஸ், குயிக்கன்ஸ், டர்போடாக்ஸ் உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை உருவாக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 2.3 பில்லியன் டாலர்கள் இதன் வருமானம். 2009ல் உலகின் மிக விரும்பப்படும் நிறுவனங்களில் ஒன்றாக பார்ச்சூன் இதழால் தேர்வு செய்யப்பட்டது இன்டியூட்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக