இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி: கடமையாற்றுமா ஐ.நா.?

‘பயங்கரவாதத்திற்கு எதிரான‌ப் போர்’ என்று கூறி ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போரில் அந்த நாட்டு அரச‌ப் படைகள் போர்க் குற்றம் இழைத்துள்ளன என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளன என்றும் அயர்லாந்தில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது முதல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.


இத்தாலி நாட்டின் மிலன் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த 14, 15ஆம் திகதிகளில் நடத்திய விசாரணையில், சிறிலங்க அரசப் படைகள் நடத்திய அப்போரில் பாதிக்கப்பட்டு, குறிப்பாக இறுதிக் கட்டப் போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்காயல், வட்டுவாகல் ஆகிய இடங்களில் இருந்து தப்பிவந்தவர்கள் நேரடியாக அளித்த சாட்சியங்களும், செயற்கைக்கோள்கள் எடுத்தப் படங்களும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஆதாரங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா.வின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை பதிவு செய்து அறிக்கை தயாரிக்கும் ‌பி‌லி‌ப் ஆல்ஸ்டன், சிறிலங்க இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்திச் சுட்டுக் கொன்ற வீடியோ பதிவு உண்மைதான் என்ற அறிக்கையும் சிறிலங்க அரசின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான அதன் குற்றங்களையும் உறுதி செய்துள்ளது.

இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர் பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

1) சிறிலங்க அரசு போர் குற்றம் இழைத்துள்ளது
2) மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது
3) சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டும்
4) சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு பன்னாட்டு சமூகமே, குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்துமே காரணம்

என்று கூறியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசப் படைகள் இழைத்த குற்றங்கள் அனைத்தும், அவைகள் சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாக இருந்தும், இதுவரை முறையான விசாரணை ஏதுமற்ற, நிரூபிக்கப்படாத குற்றச்சாற்றுகளாகவே இருந்தன.


ஆயினும், 2009 ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரை, மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்தத் தமிழர்கள் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பான உறுதியான தகவல்கள் அடிப்படையில் ஐ.நா. அறிக்கை தயாரித்திருந்தது. ஆனால் வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

போரில் சம்மந்தப்படாத மக்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் கண்டித்தன. மனித உரிமைகளை காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடைய ஐ.நா. கண்டிக்கவில்லை.

இறுதிக் கட்டப்போரில், கடைசி சில நாட்களில், பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு, போர் முடிந்தது என்று அறிவித்தப் பின்னரே, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்குமாறு சிறிலங்க அரசிடமே பான் கீ மூன் ‘வேண்டுகோளை’ முன்வைத்தார்!

அதாவது, போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் சிறிலங்கப் படையினரே என்பதாகவும், அவர்கள் நடத்திய கண்மூடித்தனமான படுகொலைக்கு சிறிலங்க அரசிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும் சித்தரிக்கும் விதமாகவே பான் கீ மூனின் ‘வேண்டுகோள்’ இருந்தது. ஆனால் அதைக்கூட சிறிலங்க அதிபர் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான், இறுதிக் கட்டப்போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விவரம் தி டைம்ஸ், ல மாண்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றில் வெளிவர, அதன் விளைவாக ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஜெனிவாவில் கூட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக