சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும்விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களைப் போக்குவரத்து போலீஸôர் கண்காணித்து கைது செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கையை மதித்து நடந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம் என கைதானோர் அதன்பிறகு எண்ணியிருப்பார்களோ என்னவோ?
புத்தாண்டு தினத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ. 47 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுஅருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.
சுப நிகழ்ச்சிகளோ, துக்க நிகழ்ச்சிகளோ பார்ட்டி என்ற பெயரில் மதுகுடித்து கூத்தடிப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருசில ஆண்டுகளாகப் புத்தாண்டையும் மதுமயக்கத்திலேயே வரவேற்கும் பு(ம)து வகை கலாசாரம் சென்னை போன்ற பெரிய நகரங்களை மட்டுமன்றி சின்னஞ்சிறிய கிராமங்களிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.
முகவரி கேட்டு வருவோருக்கு வழிசொல்ல முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள், பூங்காக்கள், கோயில்கள் உதவின. இப்போது டாஸ்மாக் கடைகளே பெரிதும் உதவுகின்றன. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது ஆறு வற்றாமல் பாயும்படி பார்த்துக் கொள்வதால் நாட்டில் நடப்பது "குடி'யாட்சிதான் என்று ஆட்சியாளர்கள் ஒருவகையில் மார்தட்டிக் கொள்ளலாம்.
மயக்கம் தரும் "கள்'ளைத் தரும் என்பதாலேயே பெரியார் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்}இது கடந்த கால வரலாறு. ஆனால், அவரிடம் "பாஸ்மார்க்' வாங்கியதாகக் கூறிப் பெருமை கொள்ளும் தலைவர்களோ, இளைஞர்களின் எதிர்காலத்தை விழுங்கும் "டாஸ்மாக்' கடைகளைத்தான் திறந்து வைக்கின்றனர். இது நிகழ்காலம் சொல்லும் கசப்பான உண்மை.
திராவிடம் என்னும் இனப்பற்று பேசிய தலைவர்கள் அந்த இனத்தின் இளைஞர்களையும், குடும்பங்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தே தீரா விடம் (விஷம்) என்னும் மதுவைப் பணப்பற்று காரணமாக ஆதரிக்கின்றனர் என்பது வேதனை தரக்கூடியதுதானே?
அரசர்களான கடையேழு வள்ளல்கள் நாடி வந்த குடிமக்களுக்கெல்லாம் வாரிவாரி வழங்கினார்களாம். கலிகால வள்ளலான மது அரக்கனோ, மக்களின் குடியால் கஜானா நிரம்பி வழியவழிய அரசுக்கு வாரி வழங்குகிறான். நாய் விற்ற காசு குரைக்குமோ என்னவோ, ஆனால் மது விற்ற காசு என்றால் நிச்சயம் மயக்கம்தான், ஆட்சியாளர்களுக்கு.
இப்போது, வாங்கும் ஊதியத்தின் மொத்தத்தையும் ஒரு குடும்பத் தலைவன் குடித்தே அழித்தாலும் பரவாயில்லை. அவன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும். அதைக் கொண்டு நியாயவிலைக் கடையில் வாங்கும் கிலோ அரிசியில் அவன் குடும்பம் பசியாறுமே என இவர்கள் நியாயம் பேசலாம்.
பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து, உள்ளுறுப்புகளும் கெட்டு, ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் அவனும், அவன் குடும்பமும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அதற்கும்தான் இருக்கவே இருக்கிறதே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும் நியாயப்படுத்தலாம்.
மதுபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளியோரின் வாழ்வில் குடும்ப விளக்கை ஏற்ற முயல்வதாகக் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால், மதுவால் நிலைகுலைந்த வீடு இருண்ட வீடுதானே?. அங்கு அழகின் சிரிப்பைக் காண்பதெப்படி?
படித்துப் பழகிய தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து இன்று குடித்துப் பழகும் தலைமுறை உருவாகி வருகிறது. ஊக்கத்தைக் கைவிடாதே என்ற பொருளில் "ஊக்கமது கைவிடேல்' என்றார் ஒüவையார். ஆனால், இனி வரும் தலைமுறை "ஊக்க மது கைவிடேல்' என தங்கள் வசதிக்கேற்ப வாசித்து மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிகமாய் உலவிய மயிலும், புலியும் தேசியப் பறவையாகவும், விலங்காகவும் ஆகிவிட்ட பின்பு ஏனோ எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. அந்த வகையில் பார்த்தால் நாட்டில் ஆறாக ஓடும் மதுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அதை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்றால் அதை தேசிய பானமாக ஆக்குவதுதான் ஒரேவழி போலும்.
கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதி, குறளோவியம் தீட்டிய முதல்வர், மது அரக்கனுக்கும் ஒரு முடிவுரை எழுதி, தமிழகத்துக்கு நல்வழி காட்ட வேண்டும்.
தற்போது தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்ற கிரீடம் சூட்டி அழகுபார்க்கும் முதல்வர், தமிழகத்துக்கும், தமிழனுக்கும் மதுவிலக்கு என்னும் நிரந்தர மலர்க்கிரீடம் அணிவித்து
தலைநிமிரச் செய்து அழகுபார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
பதிலளிநீக்கு