வாஷிங்டன்: கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா. அலுவலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
அமெரிக்காவுக்கு கிழக்கே கியூபா தீவுக்கு அருகே உள்ளது ஹைத்தி.
இதன் தலைநகர் போர்டாபிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவல் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்துவருகின்றன.
ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.
ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக