இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஹைதி பூகம்பப் பேரழிவு: சர்வதேச ஒத்துழைப்புக்கு சோதனைக் களம்: காஸ்ட்ரோ

ஹவானா, ஜன. 18: ஹைதி நாட்டில் நிகழ்ந்த பூகம்பப் பேரழிவானது சர்வதேச ஒத்துழைப்புக்கு சோதனைக்களமாக அமைந்துள்ளது என, கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார்.

அதேநேரத்தில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதியை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதாக இதர இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

83 வயதாகும் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 2006 ஆம் ஆண்டு கியூபா அதிபர் பதவியிலிருந்து விலகினார். எனினும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஹைதி பூகம்பம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மனிதகுலம் தனக்காக என்ன செய்யப் போகிறது என்பதற்கு ஹைதி ஓர் உதாரணமாகத் திகழப் போகிறது.

ஹைதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய நடவடிக்கைகளில் அமெரிக்காவும், கியூபாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒத்துழைப்பு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. நாடுகளுக்கு இடையிலான போட்டி, தற்பெருமை, உள்நோக்கங்கள் இவற்றைக் கடந்து, ஹைதியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அந்தக் கட்டுரையில் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை தனது முக்கிய எதிரியாக கியூபா கருதி வருகிறது. இருப்பினும், ஹைதிக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது நாட்டு வான்வழியாகச் செல்வதற்கு கியூபா அனுமதி அளித்தது. அமெரிக்கா} கியூபா இடையிலான இந்த ஒத்துழைப்பு மிகவும் அரிதானது எனக் கருதப்படுகிறது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதிக்கு 10 டன் மருந்துப் பொருள்களையும், 450 மருத்துவ அலுவலர்களையும் கியூபா அனுப்பிவைத்துள்ளது. இந்த மருந்துப் பொருள்கள் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்ட் ஆஃப் பிரின்ஸ் விமான நிலையத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதி பூகம்ப நிவாரண நடவடிக்கை விஷயத்தில் அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் விதத்தில் காஸ்ட்ரோ கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இதர இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அமெரிக்காவின் நிவாரண நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகள் என்ற பெயரில் ஹைதியை ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பு செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாக வெனிசூலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக