பாரிஸ், ஜன. 5-
தற்போது குளிர்காலம் என்பதால் கடுமையான பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் உறைபனி கொட்டுகிறது. வீடுகள் மற்றும் ரோடுகள் முழங்கால் அளவுக்கு பனியால் மூடிக்கிடக்கிறது.
இதனால் போக்குவரத்து உள்பட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
போலந்து நாட்டில் மைனஸ் 25 டிகிரிக்கு தட்ப வெப்பநிலை மாறிவிட்டது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் ஜாலியாக கொண்டாட முடியவில்லை. அன்று மட்டும் 13 பேர் பலியானார்கள். அங்கு இதுவரை கடுமையான குளிர் மற்றும் உறைபனிக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் இருந்து பனிப்பாறைகள் அடிக்கடி உருண்டு கீழே விழுகின்றன. இதில் சிக்கி சுமார் 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.
மேலும் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு செல்லும் பலரை காணவில்லை. அவர்கள் உறை பனியில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, அவர்களை தேடும் பணியில் 8 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே உறை பனிக்குள் புதைந்து பிணமாக கிடந்த 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. அவர்களில் 2 பேர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜெர்மனிக்காரர், ஆஸ்திரியாவில் உள்ள மலைகளில் இருந்தும் பனிப்பாறைகள் உருண்டன.
இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். அதுபோல பிரான்ஸ் மன்றும் இத்தாலியில் பனிப்பாறையில் சிக்கி 3 பனிச்சறுக்கு வீரர்கள் இறந்தனர்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில் பல அதிவேக ரெயில்கள் மிக காலதாமதமாக செல்கின்றன.
நேற்று மட்டும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிளும் கடுமையான உறைபனியில் சிக்கி தவிக்கின்றன. கடுமையான உறைபனி மற்றும் குளிருக்கு இதுவரை 150 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக