இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஜனவரி, 2010

உலகை அச்சுறுத்தி வரும் ஊடகக் கொலைகள்!

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கு நல்லதொரு சான்றாகும். வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி அதன் வருடாந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.

உலக நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 33 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573 பேர் கைது செய்யப்பட்டதுடன் 1456 பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டில் 60 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 26 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை சர்வதேச ஊடக அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளின் தேவையை உணர்த்தியுள்ளது.

யுத்தம் மற்றும் தேர்தல்கள் விடயம் தொடர்பில் 2009 ஆண்டில் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான செய்திகளை வெளிக்கொணர்வதில் உலக அளவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணியுள்ளன.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.



ஆப்கான் நாட்டிலும் மெக்சிகோ, சோமாலியா ஆகிய பகுதிகளிலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 929 ஆக இருந்தது. எனினும் இவ்வாண்டு 1456 ஆக அது உயர்வடைந்துள்ளது. இதில் 364 முறைப்பாடுகள் ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

தேர்தல் வன்முறை காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 ஊடகவியலார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமே இவ்வாண்டில் அநேகரது விமர்சனத்துக்கு உள்ளானது. ஒரே நேரத்தில் மிக அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தை உலக நாடுகள் பல கண்டித்திருந்தன.

அதேவேளை, தமது சுயகருத்துக்களை இணையத்தில் வெளியிட்ட நூற்றுக்கும் அதிகமான வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எகிப்து நாட்டின் வலைப்பதிவர் கரீம் அமீர் தனது சொந்த கருத்தினை வெளியிட்டமைக்காக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அத்துடன் வலைத்தளத்தினூடாக பிரசித்தி பெற்ற சர்கனர் என்ற நகைச்சுவை நடிகர் இன்னும் 34 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 167 ஊடகவியலாளர்கள் இதுவரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சராசரியாக ஊடகவியலாளர் ஒருவரேனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் மாத்திரம் 60 ஊடகவியலாளர்கள் உடலளவில் தாக்கப்பட்டுள்ளார்கள்.



உண்மையான செய்திகளை வெளியிட்ட காரணத்துக்காக பலாத்காரமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் பங்களிப்பு இல்லை எனின், உலக நகர்வும் பூஜ்ஜியமாகவே இருக்கும். ஊடகவியலாளர்கள் சமுதாயம் சார்ந்தவர்கள். சமுதாயத்துக்காக உழைப்பவர்கள். சமுதாயத்துக்காகப் பாடுபடும் ஊடகவியலார்கள் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இரண்டு ஊடகவியலாளர்கள் 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பிரபலமான 'சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாகும்.

அதே போன்று, மற்றுமொரு ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் யுத்த காலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டுக்காகத் தற்போது 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

பெரும்பாலான நாடுகளில் ஊடக சுதந்திரம் இருப்பதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே கூறப்பட்டு வருகிறது. எனினும் உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது உலக நாடுகளில் ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியாகவே எண்ணத் தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாட்டுத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

-அஞ்சனா

வீரகேசரி இணையம்

பிரபாகரன் உடல்' பற்றிய தொழில்நுட்பத்தை ராஜபக்சேவிடம்தான் கேட்க வேண்டும்!- புலிகள் கிண்டல்

கொழும்பு: சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பில் பலத்த சந்தேகங்கல் எழுப்பப்பட்டன. அனைவரது சந்தேகத்துக்கும் விடையாக, புலிகளின் செய்தித் தொடர்பாளரே இப்போது பேட்டி அளித்துள்ளார்.

பிரகாரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டியது பற்றிய கேள்விக்கு, அந்த உடல் 'செய்யப்பட்ட' அதீத தொழில்நுட்பம் பற்றி ராஜபக்சே அல்லது பொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூனியர் விகடனில் வந்துள்ள தமிழ்மாறனின் பேட்டி:

"புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?"

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''

''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''

''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம்.

இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''

''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''

''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''

''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''

''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''

''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டிருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப்பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''

''இது மக்கள் விடுதலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்களின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்காவிட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''.

இவ்வாறு கூறியுள்ளார் தமிழ்மாறன்.

ஹைட்டி: 3 வார குழந்தை உயிருடன் மீட்பு

நிலநடுக்கத்தினால் பேரழிவுக்குள்ளான ஹைட்டியில், இடிபாடுகளுக்கிடையே கிடந்த 3 வார குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஹைட்டியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

நிலநடுக்கம் நிகழ்ந்து ஒரு வார காலம் ஆகிவிட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிக் கிடந்தவர்களில் 121 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜேக்மல் என்ற இடத்தில் மீட்புக் குழுவினர் இன்று ஒரு வீட்டிலுள்ள இடிபாடுகளை அகற்றியபோது பிறந்து 23 நாட்கள் மட்டுமே ஆன பெண் குழந்தை ஒன்று உயிருடன் கிடப்பது தெரிய வந்தது.

சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர், மீட்புக் குழுவினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

காயம் ஏதுமின்றி ஆரோக்கியமாக காணப்பட்ட அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரான்ஸ் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

புதன், 20 ஜனவரி, 2010

பொய் பேசினால் கையெழுத்தே காண்பித்துவிடும்

ஜெருசலேம், ஜன.19: ஒருவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என்பதை அவரது கையெழுத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி கில் லுரியா தெரிவித்துள்ளார்.

தனது நீண்டகால ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என்பதை கண்டறிய ஏற்கெனவே பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.

இவற்றின் மூலம் ஒருவரின் நேர்மை, நேர்மையின்மையை துல்லியமாகக் கண்டுபிடித்திட இயலாது.

ஆனால் நான் கண்டுபிடித்துள்ள புதிய முறை மூலம் ஒருவரின் பேச்சின் நேர்மையை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் கில் லுரியா கூறினார்.

ஒருவரது பேச்சின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழும்பட்சத்தில் அவரிடம் வெள்ளைத்தாளை அளித்து அதில் நிறையை வாசகங்களை எழுதுமாறு அவரை பணிக்க வேண்டும்.

அவ்வாறு எழுதும்போது அவர் எழுதும் விதம், எழுத்தின் அழகு உள்பட சில விஷயங்களை ஆராய்ந்தால் அவர் உண்மையை பேசுபவரா அல்லது புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுபவரா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்று மேலும் லுரியா கூறினார்.


தினமணி

எழுத்தறிவு இல்லாதவர்கள் இந்தியாவில் அதிகம்: யுனெஸ்கோ

உலகில் இன்னும் எழுத்தறிவு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்வதாக ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

அத்துடன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 759 மில்லியன் லட்சம் வயது வந்தோர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மேற்கூறிய எழுத்தறிவு இல்லாத 759 மில்லியன் பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பங்களாதேஷ், சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில்தான் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், இது இந்த மில்லினியம் ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல!

புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி இரு துருவப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கு யாரும் முற்பட முடியாது. அதற்கான அங்கீகாரத்தை புலம்பெயர் தமிழினம் வழங்கும் என்ற கற்பனாவாதம் செல்லுபடியாகாது. ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல! இவ்வாறு ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை இன்றைய இதழில் "நமது நோக்கு" இல் குறிப்பிட்டுள்ளது.

பாரிசிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் இன்றைய பதிப்பில் வெளிவந்த 'நமது நோக்கு' என்ற ஆசிரியர் தலையங்கத்தின் முழுவடிவம்:

அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார். அவரது விலாவில் ஈட்டியால் குத்தி இறப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அவரது உடலை குகை ஒன்றினுள் வைத்து, பாறையால் மூடிவிட்டார்கள். அந்த நாட்டு அரசு அவரது மரணத்தை அறிவித்தது. அந்தக் காலத்தில், தொலைக்காட்சி வசதியோ, கணனி வசதியோ இருந்திருந்தால் அந்தக் கொடூரமான காட்சி உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும்.

தேவகுமாரனின் மரணத்தை அவரை விசுவசித்தவர்கள் நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்தார் என்று அவரது சீடர்கள் உறுதிபடக் கூறினார்கள். அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்பினார்கள். 2010 வருடங்கள் ஆகியும் அந்த மரணத்தை நிராகரித்த மக்களால் அவரது புனிதம் நிலை நிறுத்தப்பட்டது. இன்றுவரை அவரது போதனைகள் வேதமாகப் பல கோடி மக்களை நெறிப்படுத்துகின்றது. இது புராணக் கதையல்ல. நிகழ்ந்தும் முடியாத வரலாறு.

கடந்த வருடம் அதே போன்று ஒரு படுகொலை அறிவிக்கப்பட்டது. அதனை யாரும் நேரடியாகப் பார்க்கவில்லை. கொலையாளிகளால் ஒரு மரணித்த உடலம் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது. அந்தக் காட்சிகள் கணனிக் காணொளி மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. அந்தக் காட்சிகளின் உண்மைத் தன்மை கேள்விக்குரியதாக உள்ளதாக அறிவுசார் கருத்துக்கள் எழுந்தன. முதல் நாள் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் காண்பிக்கப்பட்டது. அவரை விசுவசித்த மக்கள் அந்தக் காட்சிகளை நம்ப மறுத்து நிராகரித்தார்கள். அவரது உடலம் எரியூட்டப்பட்டு, கடலில் வீசப்பட்டது என்ற கொலையாளிகளின் வார்த்தைகளையும் நம்ப மறுத்தார்கள். அவர் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. அவரது சிந்தனையும் இலட்சியமும் உலகம்வாழ் தமிழர்களின் உணர்வுகளை மேம்படுத்தியது. அவரது இலட்சியத்தை நெஞ்சில் நெருப்பாக்கிக்கொண்டு புதிய பல போர்க்களங்களில் புகுந்து போராடுகிறார்கள்.

ஆம், தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த எதிரிகளின் அந்தப் பரப்புரைகளால் தமிழர்களின் எழுச்சி எந்த விதத்திலும் குறைந்து செல்லவில்லை. தங்கள் சூரியத் தேவனுக்கு மரணம் என்பது கிடையாது என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடு தங்களிடம் தலைவர் சுமத்தியுள்ள பணியினைத் தொடருகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களது பலம். அந்த நம்பிக்கையே அவர்களது வாழ்தலின் சுவாசம். அந்த நம்பிக்கையே அவர்களது எதிர்கால வெளிச்சம். தேவகுமாரன் உயிரோடு இருப்பதாக உலகம் நம்புவது போல், தேசியத் தலைவர் அவர்களும் ஒரு நாள் வருவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.

இத்தனை பேரழிவு யுத்தத்தை நடாத்தி, தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா? சிங்களத்தில் சொல்வதைத் தமிழர்கள் ஏற்க மறுப்பதால் அதனைத் தமிழில் சொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்கள். தமிழில் சொல்லியும் தமிழர்கள் அதை ஏற்க மறுத்தே விட்டார்கள். ஆனாலும், பாலூற்றிக் கதை முடிக்கப் புறப்பட்டவர்கள் அதனை விட்டு விடுவதாக இல்லை. தலைவர் குறித்த நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கும்வரை தமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும்வரை முகம் காட்ட மறுத்தவர்கள் மீண்டும்... மீண்டும்... அதே வசனங்களோடு அரங்கிற்கு வரத் தவிக்கிறார்கள். அதற்காகத் தமிழ் மக்களை இரு துருவப்படுத்தும் முயற்சியிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்.

தற்போது அவர்களுக்கான அரங்கமாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், பாரிஸ் புறநகரான சார்சேலில் நடைபெற்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' அரங்கத்தில் இடம்பெற்ற உரையாடல்களும் இதையே உணர்த்தியது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கும் முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.

திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும், பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும், அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்த்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பாலூற்றிக் கதை முடிக்க முயற்சிப்பது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று அவமானம் எனப் பிரகடனப்படுத்துவது, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சிப்பது, மக்கள் பேரவைகள்மீது அவதூறான தாக்குதல்களைக் தொடுப்பது என்று அவரது அணியிலிருந்து சகதிகள் மட்டுமே வெளிவந்து கொண்டுள்ளன. மிகப் பெரிய தேசியக் கடமையினை நிறைவேற்றத் துடிக்கும் திரு உருத்திரகுமார் அவர்கள் காலம் தாழ்த்தாது இத்தகைய சேறடிப்புக்களை தடுத்து நிறுத்தாதுவிட்டால், அவரது முயற்சியே அதில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்புப் பேரவலம் நடாத்தி முடிக்கப்பட்டு எட்டு மாதங்களாகிவிட்ட நிலையில், தமிழீழ மக்கள் அசைவியக்கமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அபாயகரமான தளத்தில் நின்றுகொண்டு தம்மால் முடிந்த நகர்வுகளைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆக்கபூர்வமாக இயங்கக் கூடிய நிலையில் பலமாக உள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்கான போராடும் பொறுப்பும் தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டது. அந்தப் பலத்தைச் சிதைப்பதற்கு முயலும் எவரையும் தமிழீழ மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தமிழீழ அரசியல் சார்ந்த எந்த அமைப்பும் தனித்த பாதையில் பயணிக்க முடியாது. இது எமது இன விடுதலை சார்ந்த போராட்டம். இதில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இல்லை. புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்தி இரு துருவப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கு யாரும் முற்பட முடியாது. அதற்கான அங்கீகாரத்தை புலம்பெயர் தமிழினம் வழங்கும் என்ற கற்பனாவாதம் செல்லுபடியாகாது.

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல!

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஹைதி பூகம்பப் பேரழிவு: சர்வதேச ஒத்துழைப்புக்கு சோதனைக் களம்: காஸ்ட்ரோ

ஹவானா, ஜன. 18: ஹைதி நாட்டில் நிகழ்ந்த பூகம்பப் பேரழிவானது சர்வதேச ஒத்துழைப்புக்கு சோதனைக்களமாக அமைந்துள்ளது என, கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார்.

அதேநேரத்தில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதியை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதாக இதர இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

83 வயதாகும் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 2006 ஆம் ஆண்டு கியூபா அதிபர் பதவியிலிருந்து விலகினார். எனினும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஹைதி பூகம்பம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மனிதகுலம் தனக்காக என்ன செய்யப் போகிறது என்பதற்கு ஹைதி ஓர் உதாரணமாகத் திகழப் போகிறது.

ஹைதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய நடவடிக்கைகளில் அமெரிக்காவும், கியூபாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒத்துழைப்பு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. நாடுகளுக்கு இடையிலான போட்டி, தற்பெருமை, உள்நோக்கங்கள் இவற்றைக் கடந்து, ஹைதியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அந்தக் கட்டுரையில் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை தனது முக்கிய எதிரியாக கியூபா கருதி வருகிறது. இருப்பினும், ஹைதிக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது நாட்டு வான்வழியாகச் செல்வதற்கு கியூபா அனுமதி அளித்தது. அமெரிக்கா} கியூபா இடையிலான இந்த ஒத்துழைப்பு மிகவும் அரிதானது எனக் கருதப்படுகிறது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதிக்கு 10 டன் மருந்துப் பொருள்களையும், 450 மருத்துவ அலுவலர்களையும் கியூபா அனுப்பிவைத்துள்ளது. இந்த மருந்துப் பொருள்கள் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்ட் ஆஃப் பிரின்ஸ் விமான நிலையத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதி பூகம்ப நிவாரண நடவடிக்கை விஷயத்தில் அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் விதத்தில் காஸ்ட்ரோ கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இதர இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அமெரிக்காவின் நிவாரண நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகள் என்ற பெயரில் ஹைதியை ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பு செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாக வெனிசூலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

தினமணி

எனது கதை முடிந்துவிட்டது: ராஜபக்ச புலம்பல்

தனது சகோதரர்கள் தன்னை தின்றுவிட்டதாகவும், தனது கதை முடிந்துவிட்டதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்ச புலம்பியுள்ளார்.

அண்மையில் மெதமுலன ராஜமஹா விகாரைக்கு சென்ற ராஜபக்ச, அங்கு விகாராதிபதியை சந்தித்து தனது நிலைமையை கூறி புலம்பியுள்ளதாகவும், அப்போது மேற்கண்டவாறு கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சவின் நிலைமையை அறிந்து கொண்ட விகாராதிபதி, அங்கிருந்த ஏனைய புத்த பிக்குகளை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அதிபருடன் உரையாற்றிய விகாராதிபதி,"பதவிகள் கிடைக்கும்; அவை இல்லாமல் போகும்.அதுதான் உலக வழமை" என்று உபதேசம் சொல்லியதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடும் மன அழுத்தம் காரணமாக, தற்போது ராஜபக்ச மதுவை அதிகம் அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை.உடல் நலமே கெடும் என ராஜபக்சவை அவரது மனைவி எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி: கடமையாற்றுமா ஐ.நா.?

‘பயங்கரவாதத்திற்கு எதிரான‌ப் போர்’ என்று கூறி ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போரில் அந்த நாட்டு அரச‌ப் படைகள் போர்க் குற்றம் இழைத்துள்ளன என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளன என்றும் அயர்லாந்தில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது முதல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.


இத்தாலி நாட்டின் மிலன் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த 14, 15ஆம் திகதிகளில் நடத்திய விசாரணையில், சிறிலங்க அரசப் படைகள் நடத்திய அப்போரில் பாதிக்கப்பட்டு, குறிப்பாக இறுதிக் கட்டப் போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்காயல், வட்டுவாகல் ஆகிய இடங்களில் இருந்து தப்பிவந்தவர்கள் நேரடியாக அளித்த சாட்சியங்களும், செயற்கைக்கோள்கள் எடுத்தப் படங்களும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஆதாரங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா.வின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை பதிவு செய்து அறிக்கை தயாரிக்கும் ‌பி‌லி‌ப் ஆல்ஸ்டன், சிறிலங்க இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்திச் சுட்டுக் கொன்ற வீடியோ பதிவு உண்மைதான் என்ற அறிக்கையும் சிறிலங்க அரசின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான அதன் குற்றங்களையும் உறுதி செய்துள்ளது.

இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவர் பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

1) சிறிலங்க அரசு போர் குற்றம் இழைத்துள்ளது
2) மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது
3) சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டும்
4) சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு பன்னாட்டு சமூகமே, குறிப்பாக அமெரிக்காவும், இங்கிலாந்துமே காரணம்

என்று கூறியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசப் படைகள் இழைத்த குற்றங்கள் அனைத்தும், அவைகள் சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாக இருந்தும், இதுவரை முறையான விசாரணை ஏதுமற்ற, நிரூபிக்கப்படாத குற்றச்சாற்றுகளாகவே இருந்தன.


ஆயினும், 2009 ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரை, மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்தத் தமிழர்கள் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பான உறுதியான தகவல்கள் அடிப்படையில் ஐ.நா. அறிக்கை தயாரித்திருந்தது. ஆனால் வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

போரில் சம்மந்தப்படாத மக்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் கண்டித்தன. மனித உரிமைகளை காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடைய ஐ.நா. கண்டிக்கவில்லை.

இறுதிக் கட்டப்போரில், கடைசி சில நாட்களில், பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு, போர் முடிந்தது என்று அறிவித்தப் பின்னரே, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்குமாறு சிறிலங்க அரசிடமே பான் கீ மூன் ‘வேண்டுகோளை’ முன்வைத்தார்!

அதாவது, போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் சிறிலங்கப் படையினரே என்பதாகவும், அவர்கள் நடத்திய கண்மூடித்தனமான படுகொலைக்கு சிறிலங்க அரசிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும் சித்தரிக்கும் விதமாகவே பான் கீ மூனின் ‘வேண்டுகோள்’ இருந்தது. ஆனால் அதைக்கூட சிறிலங்க அதிபர் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான், இறுதிக் கட்டப்போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விவரம் தி டைம்ஸ், ல மாண்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றில் வெளிவர, அதன் விளைவாக ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஜெனிவாவில் கூட்டப்பட்டது.

கோத்தபாயவுக்கு திடீர் மாரடைப்பாம்: நாடகம் அம்பலம்

சிறிலங்காவின் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் இலங்கை அரசு ஒரு கட்டுக்கதையை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. இதன் பின்ணணி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை கோத்தபாய பெரும்தொகையான பணத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார் என கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த நேரத்தில் கோத்தபாய சிங்கப்பூர் சென்றால் அது பெரும் சந்தேகத்தைக் தோற்றுவிக்கும் என்பதால் இவருக்கு மாரடைப்பு என்றும், சிகிச்சைக்காகவே இவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தனக்குச் சொந்தமாக உள்ள பெருந்தொகையான கறுப்புப் பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றி அதனை அங்கு வைப்பில் இட அல்லது முதலீடுசெய்ய இவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதாக கொழும்பில் இருந்து அதிர்வுக்கு செய்திகள் கிடைத்துள்ளன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை இவர் எந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் வெளியாகும் எந்த நாளிதளும் இது குறித்து எச்செய்திகளையும் வெளியிடவில்லை என்பதும் சிங்கப்பூர் தமிழர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Athirvu.

தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார் - புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சமீபத்தில் தொடங்கப்பட்ட புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lttepress.com தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாதுகாப்பாக இருப்பதாகவும் , விரைவில் மக்கள் முன் உரையாற்றுவார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது....இது தொடர்பான முழுச் செய்தி
பின்வருமாறு....

http://www.lttepress.com/more1.html

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.

சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.

எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .

திங்கள், 18 ஜனவரி, 2010

தேர்தலுக்குச் சமீபமாக புலிகளின் [ராமின் ]தாக்குதல் நாடகம்

சிறிலங்காவில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்குமான திட்டமிட்ட தாக்குதல்கள் விரைவில் ஆரம்பமாகலாம் என சில தகவல்கள் கசிந்துள்ளன. இத் தாக்குதல்கள் தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடைபெறலாமெனவும் தெரிவிக்கப்படடுள்ளது.


ராமை கைது செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இன்னமும் கிழக்கு காடுகளில் ஒழிந்திருப்பதாக தாம் நம்புவதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கேணல் ராமை தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு தலைவராக நியமித்து தேர்தல் வன்முறைகளையும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையை மறுத்துள்ள சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார -

விடுதலைப்புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேணல் ராமை இராணுவம் கைது செய்யவில்லை என்றும் அவர் கிழக்கு காடுகளில் ஒளிந்திருப்பதாக தாம் நம்புவதாகவும் கூறினார்.

வரும் நாட்களில் அங்கு பல வன்முறைகள் நடைபெறலாமெனவும், தேர்தலில் போரின் வெற்றி பிரதான பிரச்சாரப் பொருளாக இருப்பதனால், போரின் அச்சத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கவும் பேணவும் அரசு விரும்புவதாகவும், இதற்கு அன்டைநாடொன்றின் ஆசீர்வாதமும் உண்டு எனவும் மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முடிந்துவிட்டது என்பதிலும் பார்க்க, போர் அபாயம் தொடர்ந்தும் உள்ளதாகவும், ஆதலால் எதிர்கட்சிகளை ஆதரிக்காது, மகிந்த ராஜபக்சேயை ஆதரிக்க வேண்டும், அப்போதுதான் போரில் நிரந்தரமாக வெற்றிகாண முடியும் என்றவகையில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் திட்டமிடபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த வகையில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ கூட இடம் பெறலாம் எனவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத் தாக்குதல் அனேகமாகச் சிங்களப்பகுதிகளைக் குறி வைத்ததாக இருக்கலாம் எனவும், இதற்கான தாக்குதல் அணிகள் அரசால் தயார் செய்யப்பட்டுவிட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் குறித்த நம்பகத் தன்மை சந்தேகத்துக்கிடமாகவிருப்பினும், கிடைக்கபெறும் ஏனைய தகவல்கள் இத்தகைய தாக்குதல் ஒன்றோ அல்லது இது போன்ற வன்முறையொன்றோ நடைபெற ஆயத்தங்கள் நடைபெறுவதை உறுதி செய்கின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் மேலதிக தகவல்கள் சில;

விடுதலைப் புலிகளை ஒடுக்கவதற்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் அவசர தாக்குதல் படையணி தற்போது அம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள கடதாசி தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிசக்திவாய்ந்த குண்டுகளை வீசுதல், இலக்கை நோக்கிச் சென்று தாக்குதல் போன்றவற்றை நடத்தும் படையணியொன்று திடீரென இந்தப் பிரதேசத்தில் எந்தக் காரணத்திற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இராணுவ அதிகாரிகளும் அறியவில்லை.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவரின் உத்தரவிற்கமையே இந்தப் பாதுகாப்புப் படையினர் அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தப் படையணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதே சமயம் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இன்னமும் கிழக்கு காடுகளில் ஒழிந்திருப்பதாக தாம் நம்புவதாகவும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கேணல் ராமை தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு தலைவராக நியமித்து தேர்தல் வன்முறைகளையும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், முன்னாள் இராணுவத் தளபதியும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருமாகிய சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திகளினதும், தகவல்களினதும், அடிப்படையில் பார்க்குமிடத்து தேர்தலுக்குச் சமீபமாக, சிங்களப்பகுதியொன்றில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் ஒன்று நடத்தப்படுவது போன்ற திட்டமிட்ட தாக்குதல் வன்முறை ஒன்று நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக அறிய முடிகிறது.

தேர்தலுக்கு முன்னதாக நிகழ்த்தப்படும் பட்சத்தில் அத் தாக்குதலை இராணுவம் முறியடித்து மீளவும் ஜனாதிபதியை வெற்றி வீரனாகக் காட்டலாமெனவும், தேர்தலில் சரத் வென்று விட்டால், அதன் பின் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் ஒன்றினால், சரத்தின் வெற்றி தேடித் தந்த அபாயம் என்ற வகையில் பிரச்சாரப்படுத்தி, பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வரமுடியாதபடி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் நிறைவேறும் பட்சத்தில், தடுப்புகாவலில் உள்ள விடுதலைப் புலிப் போராளிகள் சிலரும், சிங்கள பொதுமக்கள் சிலரும், தேர்தல் வெற்றிக்காக் கொல்லப்படலாமெனவும், இதன் தொடர்ச்சியாக வன்முறைகளும் கலவரங்களும் தூண்டப்படலாமெனவும், அத் தகவல்கள் அச்சம் தெரிவித்துள்ளன. தமிழ மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என்ற நிலையில் சிங்கள மக்களின் வாக்குக்களை கவரும் விதத்திலேயே இத்தகைய திட்டம் தீட்டப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அச் செய்திகள், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் என்றுமில்லாதவாறான வன்முறைகளுடன் அமையுமென்றே எதிர்வு கூறுகின்றன.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க பிரதிநிதிகள் தேர்வு:ருத்திரகுமாரன் தகவல்

கொழும்பு, ஜன.15- நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கு உலகம் முழுவதும் 135 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவரது அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்காக உலகம் முழுவதும் 115 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், மேலும் 20 பேர் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

புதன், 13 ஜனவரி, 2010

தேவை மதுவிலக்கு என்னும் மலர்க்கிரீடம்!


சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும்விதமாக,​​ மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களைப் போக்குவரத்து போலீஸôர் கண்காணித்து கைது செய்தும்,​​ அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கையை மதித்து நடந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம் என கைதானோர் அதன்பிறகு எண்ணியிருப்பார்களோ என்னவோ?

புத்தாண்டு தினத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ.​ 47 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாகவும்,​​ இது கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.​ மதுஅருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

சுப நிகழ்ச்சிகளோ,​​ துக்க நிகழ்ச்சிகளோ பார்ட்டி என்ற பெயரில் மதுகுடித்து கூத்தடிப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.​ அந்தப் பட்டியலில் ஒருசில ஆண்டுகளாகப் புத்தாண்டையும் மதுமயக்கத்திலேயே வரவேற்கும் பு(ம)து வகை கலாசாரம் சென்னை போன்ற பெரிய நகரங்களை மட்டுமன்றி சின்னஞ்சிறிய கிராமங்களிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.

முகவரி கேட்டு வருவோருக்கு வழிசொல்ல முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள்,​​ பூங்காக்கள்,​​ கோயில்கள் உதவின.​ இப்போது டாஸ்மாக் கடைகளே பெரிதும் உதவுகின்றன.​ வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது ஆறு வற்றாமல் பாயும்படி பார்த்துக் கொள்வதால் நாட்டில் நடப்பது "குடி'யாட்சிதான் என்று ஆட்சியாளர்கள் ஒருவகையில் மார்தட்டிக் கொள்ளலாம்.

மயக்கம் தரும் "கள்'ளைத் தரும் என்பதாலேயே பெரியார் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்}இது கடந்த கால வரலாறு.​ ஆனால்,​​ அவரிடம் "பாஸ்மார்க்' வாங்கியதாகக் கூறிப் பெருமை கொள்ளும் தலைவர்களோ,​​ இளைஞர்களின் எதிர்காலத்தை விழுங்கும் "டாஸ்மாக்' கடைகளைத்தான் திறந்து வைக்கின்றனர்.​ இது நிகழ்காலம் சொல்லும் கசப்பான உண்மை.

திராவிடம் என்னும் இனப்பற்று பேசிய தலைவர்கள் அந்த இனத்தின் இளைஞர்களையும்,​​ குடும்பங்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தே தீரா விடம் ​(விஷம்)​ என்னும் மதுவைப் பணப்பற்று காரணமாக ஆதரிக்கின்றனர் என்பது வேதனை தரக்கூடியதுதானே?

அரசர்களான கடையேழு வள்ளல்கள் நாடி வந்த குடிமக்களுக்கெல்லாம் வாரிவாரி வழங்கினார்களாம்.​ கலிகால வள்ளலான மது அரக்கனோ,​​ மக்களின் குடியால் கஜானா நிரம்பி வழியவழிய அரசுக்கு வாரி வழங்குகிறான்.​ நாய் விற்ற காசு குரைக்குமோ என்னவோ,​​ ஆனால் மது விற்ற காசு என்றால் நிச்சயம் மயக்கம்தான்,​​ ​ ஆட்சியாளர்களுக்கு.

இப்போது,​​ வாங்கும் ஊதியத்தின் மொத்தத்தையும் ஒரு குடும்பத் தலைவன் குடித்தே அழித்தாலும் பரவாயில்லை.​ அவன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும்.​ அதைக் கொண்டு நியாயவிலைக் கடையில் வாங்கும் கிலோ அரிசியில் அவன் குடும்பம் பசியாறுமே என இவர்கள் நியாயம் பேசலாம்.

பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து,​​ உள்ளுறுப்புகளும் கெட்டு,​​ ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் அவனும்,​​ அவன் குடும்பமும் கவலை கொள்ளத் தேவையில்லை.​ ஏனெனில் அதற்கும்தான் இருக்கவே இருக்கிறதே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும் நியாயப்படுத்தலாம்.

மதுபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏழை,​​ எளியோரின் வாழ்வில் குடும்ப விளக்கை ஏற்ற முயல்வதாகக் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள்.​ ஆனால்,​​ மதுவால் நிலைகுலைந்த வீடு இருண்ட வீடுதானே?.​ அங்கு அழகின் சிரிப்பைக் காண்பதெப்படி?

படித்துப் பழகிய தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து இன்று குடித்துப் பழகும் தலைமுறை உருவாகி வருகிறது.​ ஊக்கத்தைக் கைவிடாதே என்ற பொருளில் "ஊக்கமது கைவிடேல்' என்றார் ஒüவையார்.​ ஆனால்,​​ இனி வரும் தலைமுறை "ஊக்க மது கைவிடேல்' என தங்கள் வசதிக்கேற்ப வாசித்து மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகமாய் உலவிய மயிலும்,​​ புலியும் தேசியப் பறவையாகவும்,​​ விலங்காகவும் ஆகிவிட்ட பின்பு ஏனோ எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டன.​ அந்த வகையில் பார்த்தால் நாட்டில் ஆறாக ஓடும் மதுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அதை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்றால் அதை தேசிய பானமாக ஆக்குவதுதான் ஒரேவழி போலும்.

கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதி,​​ குறளோவியம் தீட்டிய முதல்வர்,​​ மது அரக்கனுக்கும் ஒரு முடிவுரை எழுதி,​​ தமிழகத்துக்கு நல்வழி காட்ட வேண்டும்.

தற்போது தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்ற கிரீடம் சூட்டி அழகுபார்க்கும் முதல்வர்,​​ தமிழகத்துக்கும்,​​ தமிழனுக்கும் மதுவிலக்கு என்னும் நிரந்தர மலர்க்கிரீடம் அணிவித்து
தலைநிமிரச் செய்து அழகுபார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்
மா.​ ஆறுமுககண்ணன்( தினமணி)

வரவு-செலவு பார்க்க ஒரு நம்பிக்கையான சாஃப்ட்வேர்!

V


பெங்களூர்: முன்பெல்லாம் கொஞ்சம் வசதியானவர்கள் தனக்கென்று ஒரு கணக்குப் பிள்ளை வைத்துக் கொள்வார்கள். இப்போது அப்படி வைத்துக் கொண்டால், கணக்குப் பிள்ளைக்கு சம்பளம் தரவே தனியாக ஓவர்டைம் பார்க்க வேண்டி வரும், வேலையாக இருந்தாலும், பிஸினஸாக இருந்தாலும்.

இதற்கு ஒரு தீர்வை தந்துள்ளது இன்டியூட் நிறுவனம். அதுதான் நிதி நிர்வாக சாஃப்ட்வேர் (நிதி மேலாண்மை மென்பொருள்).

இணையதளம் சார்ந்து இயங்கும் இந்த மென்பொருளுக்கு இன்டியூட் மணி மேனேஜர் (Intuit Money Manager) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனி நபர் நிதி நிர்வாகத்தைச் சிறப்பாகக் கையாள இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருள் மூலம் ஒருவர் தனது நிதியை எப்படிச் செலவழிக்கலாம், நிதி ஆதாரங்களை எப்படிப் பெருக்கலாம் என்பதை ஜஸ்ட் ஒரே வாரத்தில் முடிவு செய்துவிட முடியும். எத்தனை வங்கிகளில் உங்களுக்கு கணக்குகள் இருந்தாலும் அல்லது எத்தனை நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாலும், இந்தக் கருவியின் மூலம் எளிதில் அவற்றை நிர்வகிக்க முடியும்.

நேரம், பணம் இரண்டையும் மிச்சப்படுத்த இது மிகச் சிறந்த கருவி என முதலீட்டாளர்கள் மெச்சும் அளவுக்கு உள்ளது இந்த 'மணி மேனேஜர்'.

எப்படிப் பெறுவது?:

ரொம்ப சிம்பிள்... Moneycontrol.com எனும் இணைய தளத்துக்குள் நுழைந்தால், அவர்களே உங்கள் மவுஸைப் பிடித்து இழுத்துப் போய் தேவையான வழியைக் காட்டுவார்கள்! கூடவே இந்த மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 90 நாட்கள் ட்ரையல் பார்க்கவும் அனுமதிக்கிறார்கள். அதில் திருப்தி இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.

இதுகுறித்து இன்டியூட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உமங் பேடி கூறுகையில், "ஒவ்வொரு தனிநபரும் -அவர்கள் முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, மாதச் சம்பளதாரராக இருந்தாலும் சரி- இந்த நிதி மேலாண்மை சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.

இருக்கிற நிதியை சிறப்பாகக் கையாளவும், எதிர்கால நிதி ஆதாரங்களைப் பெருக்கவும், ஏற்கெனவே நிதி கையாளுகையில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் இந்த சாஃப்ட்வேர் முழுமையாக உதவுகிறது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்திய 85 சதவிகிதத்தினர், இதை உடனடியாக மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைக்கிறது..." என்கிறார்.

நம்பிக்கைக்குரிய உதவியாளர்...:

இன்டியூட் இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் விட்டல் அனந்த்குமார் இப்படிச் சொல்கிறார்:

"பெயர்தான் நிதி நிர்வாக மேலாளரே தவிர, இந்த சாஃப்ட்வேர் உண்மையில் ஒரு நம்பிக்கையான உதவியாளர் (அதான் கணக்குப் பிள்ளை.. நாம சொன்னது சரியாப் போச்சா!) என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே எந்த அளவு பணம் வைத்திருக்கிறோம் என்று சிலருக்கு நினைவே இருக்காது. கட்ட வேண்டிய தவணைகள் மறந்து போகும்... வாங்க வேண்டிய காசோலைகள் மறந்திருக்கலாம்... தனிப்பட்ட முறையில் கொடுக்கல் வாங்கல் பல நேரங்களில் மறந்து போகும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு... இதற்கெல்லாம் 'ஒன் க்ளிக் சொல்யூஷன்'தான் இந்த இன்டியூட் மணி மேனேஜர்" என்கிறார்.

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, எஸ்பீஐ போன்ற வங்கிகளுடன் இணைந்து செயல்படும் அளவு இந்த இன்டியூட் மணி மேனேஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை...

முதல் 90 நாட்களுக்கு ட்ரையல் முறையில் இந்த சாஃப்ட்வேரை இலவசமாகத் தருகிறார்கள். அதன்பிறகு ஒரு நாளைக்கு ரூ 1 என்ற கட்டணத்தில் இந்த மென்பொருள் கிடைக்கும்.

இன்டியூட் இன்கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் வர்த்தக சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தரும் ஒரு நிறுவனம். தேசிய வங்கிகள், மேலாண்மை நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்ளாக உள்ளன.

1983ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், குயிக் புக்ஸ், குயிக்கன்ஸ், டர்போடாக்ஸ் உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை உருவாக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 2.3 பில்லியன் டாலர்கள் இதன் வருமானம். 2009ல் உலகின் மிக விரும்பப்படும் நிறுவனங்களில் ஒன்றாக பார்ச்சூன் இதழால் தேர்வு செய்யப்பட்டது இன்டியூட்!

ஹைத்தியில் பயங்கர நிலநடுக்கம்-அதிபர் மாளிகை சேதம்

வாஷிங்டன்: கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா. அலுவலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவுக்கு கிழக்கே கியூபா தீவுக்கு அருகே உள்ளது ஹைத்தி.

இதன் தலைநகர் போர்டாபிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவல் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்துவருகின்றன.

ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிக நேரம் டிவி பார்ப்பதால் இதய நோய் வரும் அபாயம்

அதிகநேரம் தொலைக்காட்சி (டிவி) பார்த்துக் கொண்டிருந்தால் இதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சியை, அவர்கள் பாதிப்புகளை உருவாக்கும் முட்டாள் பெட்டி எனவும் குறை கூறினர்.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் சர்வதேச படிப்புக்காக தொலைக்காட்சி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

தற்போது 80 சதவீதத்துக்கும் மேலானோர் நாள்தோறும் 4 மணி நேரத்திற்கு குறையாமல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள். இது தவறான செயலாகும். ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு குறைவான நேரம் தொலைக்காட்சிகளை பார்த்தால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

தொலைக்காட்சிகள் மட்டுமின்றி கண்களை கூர்ந்து பார்வையிடச் செய்து கார்களை இயக்குவது, கணினி முன்பு அமர்ந்திருப்பது போன்றவையும் உடல் நலத்திற்கு கேடானது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக மொத்தம் 8,800 பேர் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் அளவு மற்றும் உடல்நிலைக் குறித்து பதிவு செய்யப்பட்டு வந்தது என்றார் அவர்.

தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு அதிகநேரம் ஒதுக்குவதால் உடலில் கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டவர்களில் 284 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 87 பேர் இதய நோயாளும், 125 பேர் புற்றுநோயாலும் இறந்தனர்.

அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் இதயநோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அமெரிக்க இதயக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

உயர்பாதுகாப்பு வலயம் "இருக்காது ஆனா இருக்கும்" :மகிந்த காமடி

யாழ்ப்பாணம் சென்ற மகிந்த இன்று துரையப்பா திறந்தவெளி அரங்கில் மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் எனபதுபோல சூசகமாகக் கூறி, பின்னர் அங்கு இராணுவத்தினர் நிலைகொள்வர் எனவும், பாதுகாப்பு அரண் அகற்றப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார். அதாவது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள, மற்றும் பாதுகாப்பு அரண் ஸ்தாபிக்கப்பட்டு அங்கு மக்கள் செல்லமுடியாத இடத்தையே நாம் உயர் பாதுகாப்பு வலயம் என்கிறோம், ஆனால் இவர் இதற்கு புது விளக்கம் சொல்கிறார்.

அதாவது இவர் பாஷையில் உயர்பாதுகாப்பு வலயம் இருக்காது ஆனா இருக்கும்!

சில இடங்களில் மட்டும் தொடர் காவலரண்கள் உடைக்கப்படுகின்றன. வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு, அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கிறது.

இரண்டு பிரதான அரச தலைவர் வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்பானது குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேதான் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களது வாக்குகளை கவரும் நோக்கில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றி எந்தவொரு வேட்பாளரும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் இறப்பை ஒரு அரசியல் காய்நகர்த்தலாக பயன்படுத்தும் சிலரை நாம் அறிவோம். அவர் நல்லடக்கத்திற்கு உதவியதற்காக நன்றி சொல்லலாம், ஆனால் அதற்காக தமிழர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இருக்காது. தமிழீழ தேசிய விழுமியங்களுடன் கூடிய அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இறுதிவரை போராட்டம் தொடரும் என்பதில் ஐயமில்லை.

வன்னியல் தயாரிக்கப்பட்ட வீரத் திரைப்படம் எல்லாளன் கனடாவில் திரையிடப்படுகிறது

இத்தாக்குதலின் பின்னர் இவ்வெற்றித் தாக்குதலை வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதற்காக சக போரளிகளின் பங்குபற்றுதலில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் எல்லாளன் என்னும் திரைப்படமாகும்
சகல தயாரிப்பு வேலைகளும் பூர்த்தியுற்ற நிலையில் கடந்த வருடம் வெளிவர இருந்திருப்பினும் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பு அனர்த்தம் காரணமாக அப்போது வெளிவர முடியவில்லை ஆயினும் சகல இன அனத்தங்களுக்குள்ளிருந்தும் வெளிப்பட்டு எல்லாளன் என்ற பெயருக்குரிய மிடுக்குடன் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் வெளிவருகிறது.
எல்லாளன் திரைப்படம் கடந்த புதனன்று ரொறன்ரோ, நகரில் ஜெராட்வீதியில் உள்ள ஜெராட் சினிமாவில் ஊடகியலாளர்களுக்கும் மற்றும் பிரமுகர்களுக்கும் கௌரவ காட்சியாக காண்பிக்கப்பட்டது.
சனவரி 9ம் திகதி சனிக்கிழமை முதல் ஜேராட் சினிமாவில் சனி, ஞாயிறு தமினங்களில் மாலை 2.30,5.00,மணிக் காட்சிகளாகவும் இரவு 7.30,10.00 மணிக்காட்சிகளாகவும் கிழமை நாட்களில் இரவு 7.30, 10.30 மணிக் காட்சிகளாகவும் கண்பிக்கப்படுகின்றது. உலகின் ஏனைய பாகங்களிலும் விரைவில் திரையிடப்படவுள்ளது.
இக்காட்சியின் தொடக்கநிகழ்வில் மாவீரர்களுக்கு அங்சலி செலுத்தப்பட்டதுடன் இப்படத்தின் தொகுப்பாளர் (editing) கோமகனின் தாயரினாலும் கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லெனின் அவர்களினாலும் குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.
21 கரும்லிகள் தங்கள் உயிரை ஈந்து நடத்திய இத்தாக்குதலை எவ்வித கற்பனை கலப்புமின்றி அப்படியெ மீண்டும் ஒரு முறை நம் கண்முன்னே நடத்திக் காட்டுகின்றது எல்லாளன் எனும் இத்திரைப்படம் ஒரு சில மணி நேர தாக்கதலுக்ககாக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி என்னும் தவம் புரிந்துள்ளனா என்பதாகும்.
நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து அளிக்கம் ஒவ்வரு போராளியின் பின்னும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும் நட்பும், ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது. ஆனால் இத்திரைப்படம் இவற்றை தத்துரூபமாக தெளிவாகக் காட்டுகின்றதது இத்திரைக்காவியம் ஈரமும் வீரமம் கொண்ட கவிதையாய் பதிவு செய்துள்ளது.
இப்படத்தின்ன் நாயகன் உட்பட படத்தில் நடித்த நால்வர் படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே வீரச்சாவடைந்து விட்டனர் ஏனையோர் நிலை என்னவோ? இத்திரைக்காவியம் வன்னியில்; எடுக்கப்பட்ட இறுதித்திரைப்படமாகும் இப்போதைக்கு எமக்காக மடிந்த மாவீரர்கள் தங்களின் வீர தீரத்தை ஈகத்தை எமக்கு காட்டியுள்ளனர் அந்ததக் காட்சிகள் இனி எப்ப வருமோ?

இந்திய நிலத்தை வேகமாக விழுங்கி வரும் சீனா!

டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம்.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அதுகுறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம்.

முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் ஏ.கே.சாஹு தலைமை தாங்கினார். ராரணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்னல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

உலகிலேயே குற்றச்செயல்கள் குறைவாகவுள்ள நாடு கட்டாரே!

உலகிலேயே கட்டார் நாட்டில்தான் குற்றவிகிதம் மிக மிக குறைவாக உள்ளதாம்.


ஒரு லட்சம் பேருக்கு 0.5 என்ற அளவில்தான் அங்கு கொலைச் சம்பவங்களின் விகிதா சாரம் உள்ளது. உலக சராசரி அளவு ஒரு லட்சம் பேருக்கு 4 என்றுள்ளது.

வழிப்பறிச் சம்பவங்களின் விகிதாசாரத்தைப் பொறுத்தவரை ஒரு இலட்சம் பேருக்கு 25 என்ற அளவில் உள்ளது. உலக சராசரி அளவு 100 ஆகும். கடத்தல், தாக் குதல், கலவரம் ஆகியவையும் மிக மிக குறைந்த அளவிலேயே கட்டாரில் நடை பெறுகின்றனவாம். இவை ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரு லட்சம் பேருக்கு 5 என்ற அளவில்தான் உள் ளது. உலக சராசரி அளவு 8 ஆக உள்ளது.

கட்டாரில் சமீபத்தில் அல்ஃபாஸா என்ற புதிய படை ஒன்று அறிமுகப்படுத் தப் பட்டது. இந்தப் படையின் முக்கியப் பணியே, 24 மணிநேரமும் சாலைகளையும், குடியிருப் புப் பகுதிகளையும் கண்காணிப்பது மட்டுமே.
எங்காவது குற்றச்செயல்கள் இடம் பெறுவதாக தகவல் வந்தால் இந்தப் படை யினர் மின்னல் வேகத்தில் அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். யாரே னும் உதவி கோரி அழைத்தாலும் கூட இவர் கள் அடுத்த நிமிடமே அங்கு ஆஜராகி தேவை யானவற்றை செய்து தருகின்றனராம்.

சனி, 9 ஜனவரி, 2010

வெந்ததைத் தின்று வாழ்பவரும், தானைத் தலைவரும்...

தானைத் தலைவருக்கு,

இந்த தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள். ‘என்னடா, இவன் தன்னைத் தானே தறுதலைன்னு சொல்லுறானேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க தலைவரே புள்ளைகளுக்கெல்லாம் அப்பன் வெக்கறது தானுங்க பேரு. வேலை வெட்டி எதுக்கும் போகாம நீங்க குடுத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டில நீங்களும் உங்க வாரிசுகளும் வகைவகையா நடத்துற சேனல்கள்ல படம் பாட்டுத்துட்டு ஊர் மேஞ்சுட்டு இருந்ததனால ஊர அழைக்காமலேயே எங்கப்பன் எனக்கு வெச்ச ரெண்டாவது பேரு தானுங்க இந்த தறுதலைங்கற பேரு. பேரு நல்லா இருக்குங்களா தலைவரே?

என்ன பண்ணித் தொலைக்கிறது தலைவரே எங்கப்பன் அம்பானி மாதிரி சொத்து சேத்து இருந்தா எனக்கு அதகொடுத்துருப்பாரு. இல்ல உங்கள மாதிரி அரசியல் செல்வாக்கு சேத்து வெச்சிருந்தா வெளங்காத என்ன மாதிரி புள்ளைக்கு ஒரு பதவியவாவது தூக்கி கொடுத்திருப்பாரு. அந்தாளே ஊர்ஊராப் போயி வேலைதேடி கல்லு மண்னு சொமந்து எனக்கு சோறுபோட்டு “வெந்ததத் தின்னுட்டு விதிவந்தா சாகலாம்னு” இன்னைக்கு செல்லாக்காசா உக்காந்துட்டு இருக்காரு. அந்தாளுகிட்ட தறுதலை தண்ட சோறுங்கற பேர தவிர எனக்கு தூக்கிக் கொடுக்க ஒன்னுமில்ல. அதனால போனா போகுதுன்னு அதையே நானும் வாங்கிகிட்டேன்.

பேரு கிடக்குது தலைவரே பேரு. நமக்கெல்லாம் சோறு தானே முக்கியம். அதனால பேசாம கிடக்கிறேன். நீங்க குடுக்குற ஒரு ரூவா அரிசியில பொங்கிப்போடறதுக்கே எங்கப்பனுக்கு இத்தனை ஓப்பாளம். கேட்டா பருப்பு 98 ரூவா, பாலு 48 ரூவான்னு பாட்டு பாடறான் அந்த மனுசன். எதுத்தும் பேச முடியல. பேசுனா குடும்பம் ரெண்டாபோயிடும். நமக்கென்ன தலைவரே நாலஞ்சு டி.வி. சேனலா இருக்கு. குடும்பம் ரெண்டானா சேனல் 16 ஆகும்னு கணக்குப்போட்டு காய் நகத்தறதுக்கு? வீட்ட விட்டு வெளிய வந்தா சோத்துக்கே சிங்கியடிக்கனும். மானம் ரோசம் பாத்தா வயித்த யாரு பார்க்கறதுங்கறதாலதான் அடங்கிப் போயிட்டிருக்கேன் தலைவரே.

எல்லா அப்பனும் உங்கள மாதிரி இல்லாட்டியும் அட்லீஸ்ட் அம்பானி மாதியாவது சொத்து சேத்து வெக்கணும்னு ஒரு ஆடர் போடுங்க தலைவரே. ‘என்ன எழவு ? அப்பவும் “சப்பான்ல சாக்கிசான் கூப்பிட்டாக.. அமொpக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக ங்கற மாதிரி” இலவசமா டி.வி. கொடுத்தீக.. கேஸ் கொடுத்தீக.. நெலம் கொடுத்தீக.. இதையும் நீங்களே குடுங்கன்னு, அதுக்கும் இந்த பிச்சக்காரக் கூட்டம் உங்ககிட்டதான் கையேந்தி நிக்கும். அதையும் குடுத்திட்டீங்கன்னா நீங்க யார்கிட்டயும் ஓட்டுக்காகக் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. வரிசைல வந்து நின்னு ஓட்ட மாறிமாறி உங்களுக்கே குத்திட்டு போயிட்டே இருப்பாங்க. ஐடியா நல்லா இருக்குங்களா தலைவரே? மனசுல வெச்சுக்குங்க 2011 ல கூட்டணி சம்பந்தமா காங்கிரஸ் கூட ஏதாவது பிரச்சனை வரலாம் அப்படி வந்தா தேர்தல் அதுகள கழட்டிவிட்டுட்டு தேர்தல் அறிக்கைல இத சேர்த்திடுங்க. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.

எனக்கென்னமோ 2011ல இந்த காங்கிரஸ்காரன் கட்டாயம் தகராறு பண்ணுவான்னுதான் தோணுது. இப்பவே பாருங்க இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோன்னு ஒன்னு ஏட்டிக்குப் போட்டியாவே பேசிட்டுத் திரியுது. என்னடா தைரியமா பேரச் சொல்றானேன்னு பாக்கறீங்களா. அட அதனால என்னங்க அதென்ன மானநஷ்ட வழக்கா போடப்போகுது. அதெல்லாம் இருக்கிறவன் போட்டாதான் செல்லும் தலைவரே.

கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு போறதுக்கே பக்கத்து நாட்டுக்கு படையெடுத்து போறது கணக்கா பத்து பதினஞ்சு செட் வேட்டி சட்டை எடுத்துட்டு போய் கடைசீல திரும்பி வரும் போது எல்லாங் கிழிஞ்சி அண்டர் டிராயரோடு வர்ற கூட்டம்தானுங்க தலைவரே இவங்க. அவங்களுக்குத் தெரியும் அவங்களோட வெக்கம் மானத்தப்பத்தி, அதனால அப்படியெல்லாம் எதுவும் செய்ய துணியமாட்டாங்கத் தலைவரே. புதுசா எந்த வழக்குலயும் ஜாயின்ட் பண்ணமுடியலங்கற வருத்தத்துல இந்த சுப்பரமணிசாமி எதாவது முயற்சி பண்ணினா காங்கிரஸ்காரங்களும் அதப்பத்தி யோசிக்க ஒரு வாய்ப்பிருக்கு. ஏன்னா எதுவோ கெட்டா குட்டிச் சுவருதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்குங்க தலைவரே.

அது செரிங்க தலைவரே இந்த தமிழ், தமிழ்னு பேசிட்டுத் திரியற பத்துப் பதினஞ்சு பசங்க சேந்து மாவீரர் தினம் கொண்டாடினாங்களே உங்களுக்கு ஏதாச்சும் நியூஸ் வந்துச்சுங்களா? மன்னிச்சுக்கங்க தலைவரே உகாண்டால ஏதாச்சும் நடந்தாவே உங்களுக்கு நியூஸ் வந்துரும். உள்ளூர்ல நடந்தது தெரியாமயா இருக்கும். அதுல அவங்க பிரபாகரன் படத்த வெச்சாலோ இல்ல பிரிஜ;பாஸி அட்லாஸ வச்சாலோ இந்த இளங்கோவனுக்கு என்ன போச்சு? உலகத் தமிழினத் தலைவர் நீங்களே பேசாம இருக்கும் போது கதர் சட்டக்காரனுக்கென்ன அடிவயித்துல தீய வெச்சமாதிரி அப்படி எரியுது?

தமிழ்நாட்டுல யார் படத்த வெக்கலாம் வெக்ககூடாதுனு சட்டம் எதாவது இருக்குதுங்களா தலைவரே? அட அப்பிடியே இருந்தாலும் அத நீங்கதானே சொல்லனும், இதுகெல்லாம் எப்படி அதபத்தி பேசலாம் நீங்களே சொல்லுங்க தலைவரே. இதனால உங்களுக்குத்தானே கெட்ட பேரு. ஊர்ல எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

அதான் தலைவரே பரமசிவன் கழுத்துல இருந்து பாம்பு கருடனைப் பார்த்து கேட்டுச்சாம ‘கருடா சௌக்கியமான்னு’ கருடனோட நிழல பாத்தாலே ஓடி ஒழியற பாம்பு பரமசிவனோட கழுத்திலே இருந்த ஒரே தைரியத்துல கருடனைப் பாத்து “கருடா சௌக்கியமான்னு” கேட்ட கதையா உங்களோட கூட்டணியில இருக்கிற ஒரே ஒரு தைரியத்துலதான் தமிழ்ங்கற பேரக்கேட்டாலோ இந்தியாவோட தேசிய விலங்கு என்னானு கேட்டா புலின்னு சொல்ல கூட பயப்படற அந்தகதர் கூட்டம் பிரபாகரனோட பேனரையே கிழிச்சுப் பாத்துச்சாம். இளங்கோவன் பாம்பாம் நீங்க பரமசிவனாம். இதெல்லாம் தேவைங்களா தலைவரே உங்களுக்கு. ஒரு பழுத்த பகுத்தறிவுவாதிய எதுக்கெல்லாம் ஒப்பிடறாங்க பாருங்க.

உங்களுக்கு மறந்திருக்காது இருந்தாலும், திருச்சி செல்வேந்திரன் ஐயா முன்னாடி ஒரு கூட்டத்துல பேசுனத மறுபடியும் இங்க ஒரு தடவ சொல்ல வேண்டியது என் கடமை.

“ஒரு காங்கிரஸ் அமைச்சருக்கு அவசரமா ஒன்னுக்கு வந்துச்சாமா. சரி பக்கத்து ஊருக்குப் போய் போய்க்கலாம்னு அடி பொடிகளோட பஸ் புடிக்க போனாராமா. அந்த காலத்துல பஸ்சுல ஓவர் லோடு ஏத்தக் கூடாது. அதனால கண்டக்டர் , ஐயா ஏற்கனவே, பஸ் புல் ஆயிருச்சு; இத்தன பேர ஏத்த முடியாது. அதனால அடுத்த பஸ்சுல வாங்கன்னு சொன்னாராம். ஊடனே காங்கிரஸ் அமைச்சருக்கு வந்துச்சே கோவம். யோவ் நான் மினிஸ்டரு. என்னையே ஏத்த மாட்டீங்கறீயான்னு கண்டக்டரை நாலு ஏத்து ஏத்த, போனா போய்தொலையட்டும்னு அத வண்டியில ஏத்திட்டுப் போனாராம்.

அடுத்த நாள் கண்டக்டருக்கு அவங்க ஆபீஸ்ல இருந்து அழைப்பு வந்துச்சாம். போய் பார்த்தா… அங்க அவரோட மேலதிகாரி முன்னாடி காங்கிரசு அமைச்சர் உட்காந்திட்டு இருந்தாராம். மேலதிகாரி ஐயா, இந்த ஆளா பாருங்கன்னு கண்டக்டரை கைகாட்ட, மினிஸ்டரும் ஆமா அவன்தான்னு அடையாளம் காட்டுனாராம்.

உடனே மேலதிகாரி யோவ் நேத்து இந்த ரூட்ல போன நீ உன்னோட பஸ்சுல ஓவர் லோடு ஏத்தினியாமான்னு கேட்க, கண்டக்டர் இல்லன்னு பதில் சொன்னாராம். உடனே மினிஸ்டர் அவன் ஏத்தினது உண்மைன்னு சொன்னாராம். மேலதிகாரி, ஐயா அது உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டாராம். உடனே மினிஸ்டர் அவரு ஏத்திட்டு போனதே என்னத்தான்னு சொன்னாராம்.

கண்டக்டர் அப்பவும், இல்லவே இல்லைன்னு சொல்ல, சட்டுன்னு மினிஸ்டர் என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொன்னாராம். என்ன ஆதாரம்னு மேலதிகாரி கேட்க நேத்து நான் போன டிக்கெட்டு இதோ இருக்கு இந்தாங்கன்னு மேலதிகாரிக்கிட்ட கொடுத்தாராம்.

மேலதிகாரி டிக்கெட்ட வாங்கிப் பாத்துட்டு, ஐயா இதுக்கெல்லாம் அவர்மேல நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு சொல்லி கண்டக்டர அனுப்பிச்சிட்டாராம்.

ஏன் தெரியுமா? ஏன்னா அந்த டிக்கெட்டுல லக்கேஜ்ன்னு எழுதி இருந்துச்சாம். ஆக காங்கிரஸ்காரன லக்கேஜ்ன்னு முதல்முதலா கண்டுபிடிச்சது ஒரு கண்டக்டர் தான்யா”

தலைவரே, இத நான் சொல்லல. வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் சொன்னது. ஒரு கண்டக்டருக்கு தெரிஞ்ச விஷயம், பத்து பதினஞ்சு வாரம் டாப் 10ல முதலிடத்தப் பிடிச்ச உளியின் ஓசை மாதிரி உன்னதமான படம் கொடுத்த உங்களுக்குத் தெரியாம இருக்குமா? அப்புறம் ஏன் இன்னும் இதுகள தூக்கி சுமக்கறீங்க. அதுக்கு இந்த வீரமணி மாதிரி ஆளுகள கூட வெச்சுக்கறது எவ்வளவோ மேல் தலைவரே. ஏன்னா தேவைப்படும்போது Law Point எல்லாம் புடிச்சு கொடுப்பாரு. கூடவே வெச்சிருக்கிற நன்றிக்காக அவரு சந்தோசமா அண்ணா விருதெல்லாம் உங்களுக்குக் கொடுப்பாரு. நீங்களும் அதுக்குப் பதிலா அவருக்கு பெரியார் விருது குடுத்து கௌரவிக்கலாம். குடுத்து வாங்கற உங்களுக்கும் சந்தோஷம் பாத்துட்டிருக்குற ஜனங்களுக்கும் ஒரு சந்தோஷம். ஆனா இந்த லக்கேஜுகளால யாருக்கு சந்தோஷம் சொல்லுங்க பாக்கலாம்.

அப்புறம் தலைவரே இந்த அம்பது அறுபது பவுன்ல உங்களுக்கு வர்ற செயின் மோதிரமெல்லாம் கலைஞர் கருவூலத்துக்கே குடுத்துடறீங்களே தலைவரே. நீங்க உங்களுக்குன்னு ஒன்னாச்சு வெச்சுக்கக் கூடாதா? ஆமா அந்த கருவூலத்தோட வேலை என்னங்க தலைவரே. நீங்க அதுக்கு குடுக்குற நகையெல்லாத்தையும் இரண்டு இரண்டு பவுணா பிரிச்சு நாட்ல நகை போட வக்கில்லாதவ‌ன் பெத்த புள்ளங்களுக்கெல்லாம் நகைபோட்டு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுங்களா? என்னமோ போங்க தலைவரே உங்களுக்குன்னு நீங்க எதையாவது சேர்த்து வெச்சிக்குங்க தலைவரே! ஏன்னா எங்கப்பன மாதிரி கடைசி காலத்துல எதுவுமே இல்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற நெலமைக்கு வந்துடக் கூடாதில்லங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க தலைவரே. சரி அத விடுங்க நம்ம லக்கேஜ் பிரச்சனைக்கு வருவோம். ஆக 67ல் ஆட்சிய பறிகொடுத்துட்டு அட்ரஸ் இல்லாம தொலஞ்சு போன இந்த லக்கேஜூகள ஒவ்வொரு தடவையும் நீங்க ஏன் தூக்கிட்டு அலையனும் அப்பறம் ஏன் முடியாம போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகனும். யோசிச்சுபாருங்க.

ஏற்கனவே இந்த தமிழ் தேசிய கோஷ்டிகள் எல்லாம் உங்கள கரிச்சு கொட்றாங்க. இலங்கைல ஒன்றரை லட்சம் தமிழர்கள் சாகறதுக்கு உங்க பதவி பயம்தான் காரணம், நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா, அவங்கள பாதுகாத்திருக்கலாம். இராஜபக்சேவோட சிங்கள பேரினவாதத்துக்கு நீங்களும் மன்மோகன் சிங் அரசும் துணை போறதா குற்றம் சாட்றாங்க.

நீங்க அனுப்பின குழு பண்ண கூத்துல திருமாவளவனுக்கு கதாநாயக வேஷம் கெடைக்கும்னு பாத்தா கடைசீல ராஜபக்சேக்கு அந்த வேஷத்தைக் கொடுத்துட்டு திருமாவ காமெடி பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு. “திரும்பி வரும்போது தம்பி திருமாவளவா, மீசையை மழித்துவிட்டு வாடா என் கண்ணேன்னு” ஒரு தந்தியாவது அடிச்சிருக்கலாம் நீங்க. திரும்பி வந்ததுக்கப்புறம் அவர அடையாளமாவது தெரியாம இருந்திருக்கும். அதே நேரத்துல நீங்களும் “நெஞ்சில் தமிழர்தம் நல்வாழ்வெனும் முத்துச் சுமையேற்றி கத்து கடல் சீறிச் செல்கையில் குத்து விளக்கிங்கொன்றை செத்து மடிய விட்டுச் செல்கின்றோம் என நினைப்பாயா தம்பி திருமா எனக் கேட்டேன். அதற்கு அவரும் மாட்டேன் தலைவா உம்மை மறந்தாலன்றோ நினைப்பதற்கு” என கூறிச் சென்றான். ஆனால் அவர் மட்டும் திரும்பவில்லைனு தேனமுதுல எழுதுன மாதிரி எழுதிட்டு நந்தி கடல் முழுக்க தேடியாவது, இல்லை வங்க கடல் முழுக்க சல்லடையிட்டு சலித்தாவது பிரபாகரனின் சடலத்தை பார்த்து கை குலுக்கிவிட்டுதான் திரும்புவான் என் தம்பின்னு கேப்புல கெடா வெட்டி இருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் வழியில்லாம அவரு மீசையோட திரும்பிட்டாரு, என்ன பண்ண தலைவரே! அங்க அவரு பேசுன பேச்சு பத்தாதுன்னு இங்கவந்து வேற எழுதறாரு அத வேற நாங்க படிச்சி தொலைக்கணுமான்னு தமிழ் கோஷ்டி கேக்குது என்ன பண்றது தலைவரே.

அவருக்குப் பதிலா நீங்க இந்த சத்தியராஜை அனுப்பி இருக்கலாம். ஏன்னா அவரு இன்னும் மனோகரா வசனத்தையெல்லாம் மனப்பாடமா சொல்லறாரு அட கொஞ்சம் வீராவேசமா பேசியாவது காட்டியிருப்பாரில்லைங்களா தலைவரே. என்ன அவரு நெஜமாலுமே பேசிட்டா சிக்கல்தான் அதுனால அவரு செரிப்பட மாட்டாருன்னு நீங்க நெனச்சிருக்கலாம். எப்படிப் பாத்தாலும் யார்யாரோ பண்ற தப்புக்கெல்லாம் உங்களுக்குதான் கெட்டபேரு வருது, மனசுக்கே கஷ்டமா இருக்குதுங்க தலைவரே. “ஆண்டவரே, இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்தருளும்” ன்னு சொன்ன ஏசுநாதருடைய இன்னொரு வடிவமா அன்பின் உறைவிடமா இருக்கிற தலைவரப் பத்தி இப்படி எல்லாம் பேசலாமான்னு கேட்டா “ராஜபக்ஷே தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்துவிட்டார். அவரை மன்னித்தருளும் ஆண்டவரேன்னு” கூட உங்க தலைவர் வேண்டுவாருன்னு சொல்றாங்க. உங்கள எல்லாரும் இப்படி பேசுறத கேக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குங்க தலைவரே. ஊங்களுக்கு கஷ்டமா இல்லீங்களா தலைவரே.

இதுல இந்த எல்லா விஷயத்தையும் மறைக்கத்தான் நீங்க செம்மொழி மாநாடு நடத்துறீங்க. அதுவும் கோயமுத்தூர் பக்கம் சரிஞ்சு கிடக்கிற கழக மார்க்கெட்டை தூக்கி நிறுத்தத்தான் அதை கோயமுத்தூர்ல நடத்துறீங்கன்னு கூட உங்க மேல பழி சொல்றாங்க தலைவரே. தமிழ் வளர்ச்சியில, தமிழனோட நலத்துல உங்களுக்கு இருக்கிற அக்கறைய யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. விட்டா எல்.கே.ஜி. பையன் பக்கத்துல இருக்கிற பையன கிச்சுகிச்சு மூட்டுனாலோ இல்ல கிள்ளி வெச்சாலோ கூட இதற்கு காரணம் இந்த கருணாநிதி தான்னு கண்டன பொதுக்கூட்டம் போட்டாலும் போடுவாங்க தலைவரே கொஞ்சம் கவனமா இருங்க.

மாநாட்டு வேலய உட்டு போட்டு மணிகணக்கா உங்களுக்கே எழுதீட்டு இருக்கறேன் மன்னிச்சுருங்க தலைவரே. அப்பறம்… இந்த மாநாட்டுல flex வெக்கறதுக்காக சில வாசகங்கள் எழுதியிருக்கேன் சரியா இருக்கானு நீங்க படிச்சுட்டு பதில் எழுதுங்க தலைவரே

“ தென்னாடுடைய தலைவா போற்றி

என்னாட்டு தமிழனுக்கும் இறைவா போற்றி

இந்திய தமிழனின் முதல்வா போற்றி

ஈழத் தமிழனின் ஈசனே போற்றி

இதுமாதிரி மகத்தான வேலய பார்த்திட்டு இருக்கும்போது கூட உருடியா ஒரு வேலயாச்சும் பண்றியா நீ தண்டசோறு தண்டசோறுன்னு எங்கப்பா திட்டீட்டேதான் இருக்காரு தலைவரே. அணணா பிறந்த நாளுக்கு கைதிகளுக்கு விடுதலை கொடுக்கிற மாதிரி உளியின் ஓசை படத்துக்காக உங்களுக்கு நீங்களே விருது குடுக்கிற இந்த நல்ல நாள்ல் எங்கப்பனையும் மன்னிச்சுருங்க தலைவரே ஏன்னா பாவிகள மன்னிக்கிற பக்குவம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு.

இப்படிக்கு

பெற்ற தகப்பனால் தறுதலை என்றழைக்கப்படும்

இரா.செந்தில்குமார்

( நன்றி - குமுதம்)

வெள்ளி, 8 ஜனவரி, 2010

உலகின் உயரமான கட்டடம் துபாயில் திறப்பு

உலகின் உயரமான கட்டடமான ‘புர்ஜ் துபாய்’ கட்டடம் நேற்று மாலை திறக்கப்பட்டது. 800 மீட்டர் உயரமுள்ள இந்தக் கட்டடம் துபாய் அரசாங்கத்தால் 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

துபாய் அரசு ரூ 1லட்சம் கோடி செலவில் உருவாக்கியுள்ள வணிகக்கடல் மாநகரின் மையத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் 160 மாடிகள் உள்ளன.

கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. துபாய் அரசர் ஷேக் முகம்மது திறந்து வைத்தார். இந்தக் கட்டடத்தால் சரிந்து கிடக்கும் துபாயின் பொருளாதாரம் நிமிரும் எனக் கருதப்படுகிறது.

உலகின் உயரமான கட்டடம் என்ற பெயரில் ‘புர்ஜ் துபாய்’ கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறவிருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 இ இந்தக் கட்டடத்தின் பணிகள் தொடங்கின. 192 கான்கிரீட் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் அடித்தளம் 12 ஆயிரத்து 500 கன மீட்டர் அளவும், 3 மீட்டர் தடிமனும் கொண்டது. கடலுக்கு மிக அருகில் இருப்பதால் இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காத வகையிலும், காற்றின் வேகம், பூமி அதிர்ச்சி ஆகியவற்றை தாங்கும் வகையிலும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தில் 57 லிப்டுகளும் 8 எஸ்கலேட்டர்களும் உள்ளன. விநாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த லிப்டுகள் 124 ஆவது மாடிவரை செல்லும். இந்த 124 ஆவது மாடியில் இருந்து 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுப்புறக்காட்சிகளை கண்டு களிக்கலாம். இந்த ர்க்கும் தளத்திற்குச் செல்ல கட்டணமாக ரூ.1200 வசூலிக்கப்படும். இங்கு பரிசுப்பொருள் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த க்கட்டடம் எழும்பியதன் பின்னணியில் இந்தியக் கட்டுமானத் தொழிலாளிகளின் பங்கு முக்கியமானது. அதேப்போல், இந்தக் கட்டடத்தின் 100 ஆவது மாடி முழுவதையும் இந்திய தொழிலதிபரான பி.ஆர் ஷெட்டி வாங்கியுள்ளார். பெங்களுரைச் சேர்ந்த இவர் அபுதாபியில் பிரபலதொழில் அதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

குற்றத்துக்கு ஆதாரம், கூசவைக்கும் வியாபாரம்! செல்போனில் செக்ஸ் லீலைகள்!

எச்சரிக்கை!! காசாகும் குடும்ப அந்தரங்கங்கள்.

குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால், தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர

விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.Image

இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள். சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார். இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார். 'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது. ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான். புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான். செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை. யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான். நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம். அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல. அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது. இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள். செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்துவரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!

இளைய சமுதாயமே! புலம்பெயர்ந்து வாழ்வோரே! எச்சரிக்கை... எச்சரிக்கை!

நன்றி : ஜூனியர் விகடன்

பனியில் உறைந்த ஐரோப்பிய நாடுகள்: குளிருக்கு 150 பேர் பலி

பாரிஸ், ஜன. 5-

தற்போது குளிர்காலம் என்பதால் கடுமையான பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் உறைபனி கொட்டுகிறது. வீடுகள் மற்றும் ரோடுகள் முழங்கால் அளவுக்கு பனியால் மூடிக்கிடக்கிறது.

இதனால் போக்குவரத்து உள்பட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.

போலந்து நாட்டில் மைனஸ் 25 டிகிரிக்கு தட்ப வெப்பநிலை மாறிவிட்டது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் ஜாலியாக கொண்டாட முடியவில்லை. அன்று மட்டும் 13 பேர் பலியானார்கள். அங்கு இதுவரை கடுமையான குளிர் மற்றும் உறைபனிக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் இருந்து பனிப்பாறைகள் அடிக்கடி உருண்டு கீழே விழுகின்றன. இதில் சிக்கி சுமார் 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு செல்லும் பலரை காணவில்லை. அவர்கள் உறை பனியில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, அவர்களை தேடும் பணியில் 8 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே உறை பனிக்குள் புதைந்து பிணமாக கிடந்த 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. அவர்களில் 2 பேர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜெர்மனிக்காரர், ஆஸ்திரியாவில் உள்ள மலைகளில் இருந்தும் பனிப்பாறைகள் உருண்டன.

இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். அதுபோல பிரான்ஸ் மன்றும் இத்தாலியில் பனிப்பாறையில் சிக்கி 3 பனிச்சறுக்கு வீரர்கள் இறந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில் பல அதிவேக ரெயில்கள் மிக காலதாமதமாக செல்கின்றன.

நேற்று மட்டும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிளும் கடுமையான உறைபனியில் சிக்கி தவிக்கின்றன. கடுமையான உறைபனி மற்றும் குளிருக்கு இதுவரை 150 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.