இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 டிசம்பர், 2009

எல்லாளன் சமாதியும் புதுமாத்தளன் சமாதியும்

மகிந்த ராஜபக்ஷவை நவீன துட்டகைமுனு என்று அடிக்கடி பலர் புகழ்பாடி வருகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவும் இதை என்றாவது மறுத்தது கிடையாது. துட்டகைமுனுவிற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. சிங்களப் பாமரரிடையே அவன் தமிழருக்கு எதிரான இனவெறியனாகவும், வரலாற்றைப் புரிந்தவரிடையே அவன் தமிழரை மதித்த ஒருவனாகவும் பார்க்கப்படுகிறான். இதில் மகிந்த ராஜபக்ஷ எந்தத் துட்டகைமுனுவாக தன்னை நினைத்திருக்கிறார் என்பதை உணர அவரது செயல்களும், அண்மையில் புதுமாத்தளனில் அவர் வைத்த சமாதியும் போதுமானது.

துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் விகாரமாதேவி, காக்கவண்ணதீசன் ஆகியோருக்கு பிள்ளையாகப் பிறந்தவன். இலங்கைத் தீவை 44 வருடங்கள் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்த தமிழனான எல்லாளனுக்கு எதிராக ஒரு படையணியைத் திரட்டிப் போர் புரிந்தவன். கடைசியில் அனுராதபுரத்தில் எல்லாளனுடன் தனிச்சமர் புரிந்து அவனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். இதுதான் துட்டகைமுனு என்ற அரசன் பற்றிய சுருக்கமான வரலாறு.

எல்லாளன் என்றால் தமிழ் தேசியத்தின் வடிவம்போலவும், துட்டகைமுனு என்றால் சிங்களத்தேசியத்தின் வடிவம்போலவும் நோக்கப்படுவது சாதாரண மரபாக இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு அரசர்களையும் இனவாதம் பேசுவோர் என்றுமே சரிவரப் புரிந்தது கிடையாது. அதனால்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற இனப்போர் எல்லாளன், துட்டகைமுனு இருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் வேலை என்பதை பலரால் விளங்க முடியாமல் போனது.

எல்லாளன் தமிழ் மன்னனாக இருந்தாலும், சிங்களவருக்கு நல்லாட்சி வழங்கிய ஒருவன். அவன் புத்தவிகாரைகளுக்கு ஒழுங்காக நிதி வழங்கி, புத்தமதம் தழைத்தோங்க வழி செய்தவன். தான் வயோதிபனாக இருந்தாலும் தமிழர் – சிங்களவர் என்ற இரண்டு இனங்கள் அரசியலுக்காக மோதுவதை அடியோடு வெறுத்தவன். நடப்பது அதிகாரப் போட்டி, இதில் இனவாதம் தேவையில்லை என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ஆகவேதான் வயோதிபனாக இருந்தும் தனிச்சமருக்காக அவன் அனுராதபுர வீதியில் இறங்கினான் வீரமரணம் அடைந்தான்.

அதேவேளை துட்டகைமுனு தமிழருக்கு எதிராக பெரும்பான்மை சிங்களவருக்காக போரிட்டாலும் எல்லாளனின் வீரத்தையும், தமிழ் ஆட்சித் திறனின் மேன்மையையும் உயர்வாக மதித்தான். அவனைப் போல எல்லாளனை தமிழர் கூட மதித்து ஒழுகியது கிடையாது. எல்லாளன் இறந்தவுடன் அவன் இறந்த இடத்தில் மிகப்பெரிய சமாதியை தானே முன்னின்று அமைத்தான். போரில் தோற்றவனை மதிப்பதே வெற்றிக்கு அழகு என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான்.

போரில் மடிந்த சிங்களவருக்கு அவன் சமாதி அமைக்கவில்லை, தமிழனுக்கே அமைத்தான். அதன் பின்னர் சிங்களவருக்கு கடுமையான உத்தரவொன்றையும் பிறப்பித்தான். எல்லாளன் சமாதியை கடக்கும் போது எந்தவொரு வாத்தியங்களையும் எவரும் இசைக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். இலங்கைத் தீவின் அதி உயர் மரியாதைக்குரிய இடம் தமிழனான எல்லாளன் சமாதிதான் என்றும் தெரிவித்தான். அந்த உத்தரவை மீறிய பலர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். புத்தமதத்தின் ஊர்வலங்களும் எல்லாளன் சமாதிக்கு தலை வணங்கி விலகிச் சென்றன. போருக்குப் பின் எப்படி நடக்க வேண்டுமெனத் தெரியாதவர்கள் தமிழருக்கு எதிராகப் போருக்குப் போக வேண்டாம் என்பதை அவன் தனது செயலால் உணர்த்தினான். அதன் மூலம்தான் துட்டகைமுனு வரலாற்றில் மிகப்பெரிய பதிவு பெற்றான்.

துட்டகைமுனு தமிழனுக்காக மாவீரர் சமாதியை அமைத்தான் என்பது ஒரு செயல், ஆனால் அதன் தாக்கமோ பல நூற்றாண்டுகளாக தமிழரின் சிறப்பை அந்தத் தீவில் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அதை விளங்காத ஜே.ஆர்.ஜெயவர்தனா எல்லாளன் தூபி என்பது துட்டகைமுனுவின் சமாதி என்றார். அங்கிருந்த எதையோ சாம்பலென்று தோண்டி எடுத்து அதை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அந்தச் சாம்பல் துட்டகைமுனுவினுடையது என்று கதையைப் பரப்பினார். அவருடைய இனவாதக் கோமாளித்தனத்திற்கு சிங்கள வரலாற்று பேராசிரியர் பரணவிதானவும் துணை போனார். அன்றோடு துட்டகைமுனு அமைத்த சமாதியின் நோக்கம் சிதைந்தது. தமிழினத்திற்கு எந்த மரியாதையும் கொடுக்காத இனப்போர் உக்கிரமடைந்தது.

எல்லாளனுடன் நடந்த போர் வரைதான் நாம் துட்டகைமுனுவை அறிகிறோம். ஆனால் போருக்குப் பின்னர் தமிழருக்கு எதிராக துட்டகைமுனு வேறெந்த இனவாத செயல்களையும் செய்ததாக வரலாற்று செய்திகளில் தகவல் இல்லை. போருக்கு முதல் மக்களை இனவாதத்தில் தள்ளக் கூடாது என்பதற்காக எல்லாளன் உயிர் கொடுத்தான். போருக்குப் பின் எல்லாளனை மதித்து இனவாதத்தை வளரவிடாது தடுப்பதற்காக துட்டகைமுனு தன் எஞ்சிய நாட்களைக் கொடுத்தான்.

துட்டகைமுனு அமைத்தது மண்மேட்டிலான சமாதியாக இருந்தாலும் அது இலங்கை மண்ணுக்கு பெருமை தேடித்தந்தது. ஆனால் அவனுக்குப் பின்னர் மலையில் ஒரு மாளிகை அமைத்தான் காசியப்பன், அதைத்தான் சிகிரியா என்று அழைக்கிறார்கள். தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவன் அமைத்ததுதான் சிகிரியா மலைக்கோட்டை. சிகிரியாவில் அஜந்தா குகை ஓவியங்களைப் போல அழகான ஓவியங்களை அமைத்து சாதனை படைத்தாலும், தந்தையைக் கொன்றவன் என்ற இழி சொல்லை அவனால் வெல்ல முடியவில்லை. சிகிரியா என்ற நினைவுச்சின்னம் உள்ளவரை அந்த அவப்பெயரை அவனால் அழிக்க முடியாது. அதே மலைக்கோட்டையில்தான் அவன் தம்பியான முகலாளன் அவனைக் கொன்று அண்ணனைக் கொன்ற தம்பி என்ற அவப் பெயரையும் பெற்றுக் கொண்டான்.

இந்த இரண்டு கதையையும் மகிந்தராஜபக்ஷ சரிவர உணர்ந்திருந்தால், சமாதிகளால் வரும் பின் விளைவுகளை விளங்கியிருப்பார். கொல்லப்பட்டவனை மறந்து கட்டப்பட்ட சிகிரியா அவமானக் கதையை சுமந்து நிற்பதையும், கொல்லப்பட்டவனை மதித்து கட்டப்பட்ட எல்லாளன் தூபி மதிப்பு மிக்க சின்னமாகப் போற்றப் படுவதையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். புதுமாத்தளனில் நாங்கள் அமைக்கப்போவது சிகிரியாவா இல்லை எல்லாளன் தூபியா என்பதை தராசில் போட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

மகிந்தராஜபக்ஷ வரலாற்றைப் பார்க்காவிட்டாலும் தன்னுடைய சொந்தப் பெயரையாவது திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். மகிந்த என்பவன் யார் என்று தன்னைத்தானே கேட்டுப்பார்த்திருக்க வேண்டும். கலிங்கத்திற்கு எதிராகப் போர் புரிந்து, அந்தப் போரின் முடிவில் யுத்த களத்திலேயே வாளைத் தூக்கிவீசிய சாம்ராட் அசோகனின் மகன்தான் மகிந்த. போரின் வெற்றியால் மனம் திருந்திய ஒரு குடும்பத்தில் பிறந்து, காவிவஸ்திரம் தரித்த ஓர் இளைஞனே அவன். வெள்ளரசு மரக்கிளையுடன் இலங்கை வந்திறங்கிய மகிந்ததேரர் புதுமாத்தளன் போய் இராணுவத்திற்கு சமாதி அமைப்பானா என்று எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஜீனியர் றிச்சாட் ஜெயவர்தனா என்ற பெயரைத் தாங்கியவர் செய்த செயலை மகிந்த என்ற பெயருடன் செய்யலாமா என்று தன்னைத்தானே கேட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று மலிவான பட்டம் கட்டிவிட்டு எல்லாத் தவறுகளையும் செய்யலாமென எண்ணுவது தவறான செயல். புலிகள் பல இலட்சம் பேர் கொண்ட சிங்களப் படைகளுடன் மோதி உயிர் விட்டுள்ளார்கள். எதிரிகளாக இருந்தாலும் போரில் ஒருவர் வீர மரணம் அடையும்போது தலையில் உள்ள தொப்பியைக் கழற்றி மரியாதை கொடுப்பது உலக மரபு. நெப்போலியன், மகா அலெக்சாண்டர் போன்ற வீரர்கள் கூட தோல்வியை தழுவியவர்கள்தான். அவர்களை அவர்களின் எதிரிகளே அதிகமாகப் போற்றினார்கள், பூவோடு சேர்ந்த நார்போல தாமும் மணம் பெற்றார்கள்.

தோல்வியில்லாமல் போரை நடாத்த முடியாது. பிரபாகரன் முப்பதாண்டுகள் இந்தப் போரை வெற்றிகரமாக நடாத்தியவர். அவரிடம் இருந்த சக்தியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான உலகப் பெரும் சக்திகளுடன் மோதியிருக்கிறார். உண்மையில் அவர் சிங்களப் படைகளுடன் இந்தப் போரை நடாத்தவில்லை என்பது நம்மைவிட சிங்கள அரசுக்கே அதிகம் தெரியும். இலங்கையில் பிறந்த ஒரு தமிழன் உலகம் முழுவதையும் எதிர் கொண்டு இத்தனை பெரிய போரை நடாத்தியிருக்கிறான் என்றால், அதற்காக பெருமைப்பட வேண்டியது யார்.. சிங்கள மக்களே. துட்டகைமுனு உயிருடனிருந்திருந்தால் மடிந்த புலி வீரர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இன்னொரு தூபியை அமைத்திருப்பான் என்பதை உணர மகாவம்சமே போதுமானது.

அதுபோல இறந்த தமிழ் வீரருக்காக அமைக்கப்பட்ட தூபிகளை சிங்கள அரசர்கள் எங்காவது இடித்தாக சரித்ததிரமிருக்கிறதா என்று மகாவம்சத்தில் தேடிப் பாருங்கள். மாவீரர் துயிலும் இடங்களை உடைக்க முன்னர் யோசித்துப் பார்த்திருக்க வேண்டிய பாரிய விடயம் இது. மாவீரர்கள் போரை முடித்துவிட்டார்கள், ஆயுதங்கள் உறங்க வைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். மறுபடியும் போர் வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாவீரர் சமாதிகளை உடைப்பது தவறான செயல். இரண்டாம் உலகப்போரில் மடிந்த வீரருக்காக கட்டப்பட்ட சமாதிகளை உடைத்தெறிந்தால் மூன்றாவது உலக யுத்தம் வராது என்று கருதுவதைப் போன்ற பாமரத்தனமான வாதம் அது.

இயேசுநாதர் என்பவர் கொல்லப்பட்ட 300 வருடங்களின் பின்னர்தான் அவருடைய கதையைத் தோண்டி எடுத்தார்கள். அப்போது அவரைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற மலினமான கதை ஒன்றையும் உருவாக்கினார்கள். அதன் விளைவு இரண்டாம் உலகப்போரில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்றொழித்தான். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்தாகக் கூறி நம்மூரில் வாய்பேசாத ஓணான்களை அடித்துக் கொல்லும் அறியாமை மிக்க சிறுவர்கள் போல ஹிட்லர் நடந்தார். இதுபோல புதுமாத்தளன் சமாதியில் விட்டுள்ள தவறு எதிர் காலத்தில் பல ஓணானுக்கு மூத்திரம் கொடுத்த கதைகளை உருவாக்கலாம், அதனால் பெரும் அழிவுகளும் வரலாம்.

பயங்கரவாதம் என்று யாரைப்பார்த்தோ ஜோர்ஜ் புஸ் வடித்த நாறிய மூத்திரத்தை தமிழர்மீது ஊற்றியது போதும். இப்பொழுது அது சிங்களவரின் உடைகளிலும் பட்டு வெடிலடிக்கிறது. அந்த மணம் சர்வதேச நீதிமன்றின் நாசில் இடிக்கும்வரை வீசுகிறது. இதையெல்லாம் மகிந்த உணர வேண்டும்.

மாவீரர்கள் என்னும் தமிழ் மைந்தர்கள் இலங்கைத் தீவில் பிறந்தவர்கள் என்ற பெருமையை குலைக்க சிறீலங்கா முயலக்கூடாது. நீங்கள் ஒழுங்கான உரிமையை தமிழர்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் போராட வேண்டிய தேவையே இல்லை என்பதை புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் போரில் மடிந்தவர்களை மரியாதைப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நீங்கள் தமிழரை எவ்வளவு மரியாதைப்படுத்தி நடக்கிறீர்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவர்கள் உங்களை மரியாதை செய்வார்கள். தமிழ் மக்களை போரால் வெல்வதைவிட அவர்களுடைய இதயங்களை வெல்வதே சரியான வெற்றியாகும்.

நன்றி: அலைகள் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக