இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2009

அதிபர் தேர்தல்-இம் முறையும் புறக்கணிக்கஈழத் தமிழர்கள்முடிவு

கொழும்பு: கடந்த அதிபர் தேர்தலைப் புறக்கணித்தது போல இந்த முறையும் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்கு ஈழத் தமிழர்கள் போய்க் கொண்டுள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள்தான் வெற்றியாளரை நிர்ணயி்க்கும் எனத் தெரிகிறது.

ஆனால் தமிழர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் சுத்தமாக இல்லை. அகதிகள் முகாம்களில் உள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிடம் வாக்காளர் படிவம் தரப்பட்டது. ஆனால் இதுவரை வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே நிரப்பித் தந்துள்ளனராம். மற்றவர்கள் விண்ணப்பத்தைக் கண்டு கொள்ளவில்லை.

முகாம் தமிழர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 13 சதவீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வாக்குகள் உள்ளதாக தெரிகிறது.

கடந்த அதிபர் தேர்தலை விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் அழைப்பின் பேரில் தமிழர்கள் புறக்கணித்தனர். இதனால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கிடைக்கவிருந்த வெற்றி வாய்ப்பு பறிபோய் ராஜபக்சே அதிபராகி விட்டார். அந்தத் தேர்தலில் வெறும் 1.2 சதவீதம் தமிழர்களே வாக்களித்திருந்தனர்.

ஆனால் இந்த முறை இது கூட இருக்காது என்று கூறப்படுகிறது.

போட்டியில் நிற்பது இரு பிசாசுகள் என்ற எண்ணம்தான் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதில் எந்தப் பிசாசை தேர்ந்தெடுத்தாலும் அது நமக்கு பலனளிக்கப் போவதில்லை. பிறகு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற விரக்தியிலும், வெறுப்பிலும் தமிழர்கள் உள்ளனர்.

ராஜபக்சே இந்தியாவின் முழு ஆதரவுடன் உள்ளார். பொன்சேகாவோ அமெரிக்கா [^] மற்றும் சீனாவின் ஆதரவுடன் உள்ளார். இந்த நாடுகள் எதுவுமே நமக்கு எந்த வகையிலும் உதவவில்லை. மாறாக நமது சொந்தங்கள் அழிவதை வேடிக்கை பார்த்த நாடுகள். எனவே இவர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்ற மன நிலையில் அவர்கள் உள்ளனர்.

தமிழர் கட்சிகள் எதுவும் சரியில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்று கூட தெரியாத குழப்ப நிலையில் உள்ளது. எனவே தமிழர்களுக்கு ஆதரவான வேட்பாளர் என்று யாரும் இல்லாத இக்கட்டான நிலை.

சொந்த வீடுகளில் குடியேற முடியாத அவல நிலை, அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட பிச்சை எடுக்காத குறையாக காணப்படும் பரிதாப நிலை, சிங்களர்களின் நில ஆக்கிரமிப்பு, குவித்து வைக்கப்பட்டிருக்கும் ராணுவம் என தங்களுக்கு பாதகமான அம்சங்களே தாயக பூமியில் பரவிக் கிடப்பதால் யாருக்கும் வாக்களிக்க அவர்கள் விரும்பவில்லையாம்.

கற்பழிப்புகள், துன்புறுத்தல்கள் என தொடர்ந்து அவலங்கள் தொடருகின்றன. உயிருக்கும், கற்புக்கும் பாதுகாப்பு [^] இல்லாத மிகப் பரிதாபமான நிலையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அதிபர் தேர்தல் எந்த வித மலர்ச்சியையும் தரவில்லை என்பதே உண்மை.

1 கருத்து: