மும்பை: சினிமாவில் சேர வந்தேன் என்று முதலில் கதை விட்ட அஜ்மல் கசாப் தற்போது நான் ஒரு சமையல்காரன் என்று தனது தசாவதாரத்தின் அடுத்த தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோயபல்ஸை விட மிகப் பெரிய புரூடா மன்னனாக மாறி வருகிறான் கசாப். வாயில் வந்ததையெல்லாம் சாட்சியமாக கூறி வருகிறான்.
கடந்த பிப்ரவரியில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கசாப் அளித்த சாட்சியங்களின் பேரில் அவனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸார் என் மீது மின்சாரம் பாய்ச்சி நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் பெற்றதால்தான் போலீஸார் கூறியபடி நீதிமன்றத்தில் தெரிவித்தேன் என்று கூறிய அவன், சிறப்பு நீதிபதி எம்.எல். தஹலியானியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலம்:
பாகிஸ்தானில் ஜீலம் அருகே உள்ள சாரயி-அலாம்கீரில் உள்ள சமையல் நிறுவனத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தேன். லஷ்கர் தீவிரவாத அமைப்பில் பயிற்சி ஏதும் பெறவில்லை. ஜமாத்-உல்-தவா என்ற தீவிரவாத அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை.
மும்பை தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டுவரும் ஹபீஸ் சய்யீத் ஜகி-உர்-லக்வி அபு கஃபா மற்றும் அபு ஹம்சா ஆகியோரை சந்திக்கவும் இல்லை. அவர்களிடம் பயிற்சியும் பெறவில்லை.
இந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து விசாரணையின்போது போலீஸார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தலைவர் மூலம் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுவதும் முற்றிலும் தவறு.
போலீஸார் தயாரித்து வைத்திருந்ததைத்தான் வாக்கு மூலமாக என்னை சொல்ல வைத்தனர். கராச்சியிலிருந்து பயங்கரவாதிகள் வந்ததாகக் கூறப்படும் படகு குறித்து எனக்கும் ஏதும் தெரியாது.
படகில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பொருள்கள் யாவும் என்னுடையது அல்ல. ஒருவேளை அது கடத்தல் பொருள்களாக இருக்கலாம். அல்லது மீனவர்களின் உடைமைகளாக இருக்கலாம்.
நீதிமன்றத்தில் காட்டப்பட்ட ஏ.கே. 47 துப்பாக்கி போலீசுடையது. என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அடையாள அட்டை என்னுடையது அல்ல. அதில் இருப்பவரும் நான் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.
எனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் யாரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. எனக்கு பாதுகாவலாக இருந்த போலீஸார்தான் என்னை மிரட்டி வாக்குமூல அறிக்கையில் கையெழுத்து வாங்கினர் என்றான்.
இப்படி தலை சுற்ற வைக்கும் வாக்குமூலத்தை கசாப் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக