இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 பிப்ரவரி, 2010

எமக்கான எதிர்காலம்: "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை"

இன்போ தமிழ்


மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

* பிரபாகரன் என்ற 'வரலாற்றின் பிரசவத்தால்' செய்ய முடியாததை, தமிழர்களின் சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாததை இனி யாரால் தான் செய்ய முடியும் என்ற கேள்வியைப் பரவலாகக் கேட்க முடிகிறது.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

* ஆனால், தமிழர்களுடைய இராணுவ பலம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற காரணத்திற்காக, எமது விடுதலைப் பயணத்தை இடை நடுவில் விட்டுவிடமுடியாது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.
சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

* தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

* எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

* தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

எங்கள் தேசியத்தின் ஆத்மா

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

* தேக்கமடைந்துள்ள போராட்டச் சக்கரத்தை நகர்த்துவதற்காகப் போட்டிகள், தேவையற்ற விமர்சனங்கள், சுய நலத்தைக் கைவிட்டு விட்டு தேசியம் மீதான பற்றுறுதியோடு நீண்டகால அடிப்படையில் செயற்படுவதற்கு ஒற்றுமைப்படுவோம், உறுதி பூணுவோம்.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

* கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

1. தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

2. . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

3. . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

4. . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

5. . சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

6. . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

7. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

8. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

9. ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

10. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.

புதினப்பலகை-க்காக சுந்தரம் இராஜவரோதயன்

இன்போதமிழ் குழுமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக