சரத் போன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாடுகள் எதுவும் தலையிட முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் ரஸ்யா சென்றிருந்த அவர், நேற்று நாடு திரும்பிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாது. எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள். ஒருவர் தவறு செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு.
அந்த வகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டு இருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை எந்தவொரு நாட்டில் இருந்தும் சரத் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.
சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவர் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அந்த வகையிலேயே இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது" என்று அமைச்சர் றோகித போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் விசாரிப்பதா அல்லது குடியியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே இராணுவத்தின் சட்டப் பிரிவு தீர்மானம் எடுக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவிடம் இருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைப்பர். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதே வேளை, இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது படையினனோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் - அவர் ஓய்வுபெற்று ஆறு மாத காலத்துக்குள் இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இராணுவச் சட்டத்தின் 57 பிரிவு அதைத் தெளிவாக கூறுகிறது. அந்த சட்ட விதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த போது இராணுவ சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்.
பாதுகாப்புச் சபை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபை. இராணுவத் தளபதியாக இருந்த போது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர்.
பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்த போது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் பல முக்கிய இரகசியங்களையும் பரிமாறிக் கொண்டிருந்திருக்கலாம். பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்று.
சரத் பொன்சேகா சேவையில் இருந்த போது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த விசாரணைகள் முடிந்த பின்னர் அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்சேகாவின் வெளிநாடுகளுடனான தொடர்புகள் குறித்து விசாரணைகளுக்குப் பின்னரே எதையும் கூறமுடியும் என்றும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இராணுவச் சட்டங்களின்படி சரத் பொன்சேகாவின் மீது விசாரiணைகள் நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு மரணதண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம் என்று முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
அதே வேளை, சரத் பொன்சேகாவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளை வவுனியா நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி இராணுவ முகாம், கொழும்பு கடற் படைத் தளம், திருகோணமலை கடற்படைத் தளம், அனுராதபுர சாலியபுர இராணுவ முகாம் ஆகியவற்றில் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான நிலையங்களாக அறிவிக்கபட்டுள்ளன.
இது தொடர்பாக அவசரகாலச் சட்ட விதிகளுக்கு அமைய விசேட வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்காவின் காவல்துறைமா அதிபர் வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா தற்போது கடற்படைத் தலைமையகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவரை சந்திப்பதற்கு நேற்று அவரது மனைவி அனோமா பொன்சேகா அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்சேகா விடயத்தில் மட்டும் தானா?
பதிலளிநீக்கு