அவசர உலகில் இணையதள பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. வீட்டுக்கு பொருள்கள் வாங்குவதில் இருந்து, பங்கு வர்த்தகம் வரை அனைத்தும் இணையதளத்தின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.
தகவல் தொடர்புக்கும், அறிவுசார் தேடலுக்கும்தான் இணையதளம் என்றிருந்த காலம் மறைந்து, மக்களின் அத்தியாவசிய, அவசியத் தேவைகளில் ஒன்றாக மாறி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத அளவுக்கு இணையதளம் இணைந்துள்ளது.
இணையதளங்களின் தேவையும், சேவையும் பெருகிவரும் நிலையில், அதில் நடைபெறும் குற்றச்செயல்களும் வேகமாகவே அதிகரிக்கின்றன. முன்பு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு மட்டுமே இக் குற்றங்கள், இப்போது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
இணையதளம், செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களில் நடைபெறும் இக் குற்றங்கள் 'சைபர் குற்றங்கள்' என்றே அழைக்கப்படுகிறது.
இணையதளம், இ. மெயிலில் நடைபெறும் குற்றங்களை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத உலக நாடுகள், இப்போது இணையதளங்களில் நடைபெறும் குற்றங்கள் ஒரு நாட்டையே உலுக்கும் அளவுக்கு இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆலோசித்து வருகின்றன.
ஆனால், இப் பிரச்னையில் உலக நாடுகளிடம் தேவையான ஒத்துழைப்பை ஒவ்வொரு நாடும் வழங்க மறுப்பதால், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக இப்போது 5 நிமிஷத்துக்கு ஓர் இணையதளம் சிதைக்கப்படுவதாக உலக அளவில் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஒரு நாட்டின் இணையதளத்தைச் சிதைப்பது, அதில் இருக்கும் தகவல்களை உருக்குலைப்பது, தகவல்களை மாற்றி எழுதுவது, தவறான தகவல்களை அளிப்பது, தகவல்களைத் திருடுவது என இணையங்களில் நடைபெறும் குற்றங்களின் பட்டியல் நீளுகிறது. இவை தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளில்தான் அதிகம் நடைபெறுகின்றன. இதுவே 'சைபர் போர்' எனவும் அழைக்கப்படுகிறது.
உலக அளவில் அதிகமாகச் சிதைக்கப்படும் இணையதளங்களில், இந்திய இணையதளங்கள் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளன. இந்திய எல்லையில் சீன ராணுவம் செய்யும் விஷமத்தனங்களைவிட, அந்த நாட்டினர் இந்திய அரசு இணையதளங்களில் செய்யும் விஷமத்தனங்கள் அதிகம். சீனாவைப் போன்று, பாகிஸ்தானும் இந்திய இணையதளங்களில் விஷமத்தனம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
இவர்களின் பிடியில் இந்திய அரசின் இணையதளங்கள் மட்டுமன்றி, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரின் இணையதளங்களும் சிக்குகின்றன. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 3 ஆண்டுகளில் 9,052 இந்திய இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. 2006}ல் 1,216 இணையதளங்கள் சிதைக்கப்பட்டதே அப்போது பெரிய அளவாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர், இணையதளங்கள் அதைவிட அதிகமான அளவில் சிதைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 6 மாதங்களில் 3,286 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. 1998}ம் ஆண்டு போக்ரானில் அணுகுண்டுச் சோதனையின்போது, அதை 'ஜீ' செய்தி சேனல், 'இந்தியா டுடே' ஆகியவை செய்தி வெளியிட்டன. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் இவ்விரு இணையதளங்களும் சிதைக்கப்பட்டன. இந்திய இணையத்தளங்கள் சிதைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
இந்திய இணையதளங்களை முதலில் அதிகமாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சிதைத்தனர். இப்போது அவர்களையும் விஞ்சி சீனர்கள் சிதைத்து வருகின்றனர். அதோடு மட்டுமன்றி பாகிஸ்தானியர்கள் செய்யும் விஷமப் பிரசாரங்களைவிட, சீனர்கள் இந்தியாவைப் பற்றி அதிக விஷமப் பிரசாரங்களை இணையதளங்கள் மூலம் செய்கின்றனர்.
இதன் காரணமாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 692 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 511 இணையங்கள் அரசுடையதாகும். இந்த இணையதளங்களில் பெரும்பாலனவை சீனர்களாலே சிதைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன.
சங்கேத வார்த்தைகளைத் திருடியும், இணையதளங்களில் சர்வர்களைச் செயலிழக்க செய்தும் இத் தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இணையதளமும் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மும்பைத் தாக்குதலுக்கு பின்னர் அதிக அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியப் பாதுகாப்பு ஆலோசக அலுவலகத்தில் உள்ள கணினிகளில் தகவல்களைத் திருடுவதற்கு சீனாவில் இருந்து இ.மெயில் வந்திருப்பது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த இ. மெயிலைத் திறந்திருந்தால், கணினிகளில் இருந்த தகவல்கள் திருடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும் எனப் பாதுகாப்பு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவுக்கு எதிராக ஒரு பனிப்போராகவே சீனாவும், பாகிஸ்தானும் சைபர் போரை நடத்தி வருகின்றன. எல்லைக்கு வெளியில் இருக்கும் ஆபத்தைப்போல, இதுவும் நாட்டில் நிலவும் அமைதியைக் குலைக்கும் ஓர் ஆபத்துதான். இத்தகைய அச்சுறுத்தலை செய்யும் சீனா, பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த வேண்டும். இச் செயலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், நாட்டில் கணினி மூலம் இயங்கும் அனைத்துத் துறைகளையும் எங்கேயோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு கட்டுப்படுத்த முடியும். அந்தக் கணினிகளில் உள்ள அனைத்துத் தகவல்களைத் திருடவும் முடியும் என தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வளர்ந்த நாடுகள் இப்படிப்பட்ட பிரச்னைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இதற்காக அந்த நாடுகள் தங்களது இணையதளங்களைக் காப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த நடவடிக்கைகளை நாமும் விரைவாக எடுக்க வேண்டும். இல்லையெனில் சீனாவிடம் இமயமலை சாரல் பகுதியை இழந்தது போன்று, இணையதளங்களை இழக்க நேரிடும்.
தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக