இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 பிப்ரவரி, 2010

பணிய மறுத்த ரசிகர்கள்

எந்தவொரு சர்வாதிகார நாடும் கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டுவருவது கலை இலக்கியத்தை மட்டும்தான். ஏனென்றால், கலை இலக்கியம் மட்டுமே எந்த அதிகாரத்துக்கும் அடங்க மறுக்கும் ஆற்றல் கொண்டவை. சர்வாதிகாரத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் எதிர்ப்பவர்கள் கலை இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

மக்களாட்சியிலும்கூட அரசியல் கட்சிகள் தங்களை நிலைநிறுத்த கலை இலக்கியம் மீது அதிகாரத்தைக் காட்ட முனைந்தாலும் தோல்விதான் ஏற்படும் என்பது மும்பையில் ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள "மை நேம் ஈஸ் கான்' படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்று இருப்பதால் உறுதிப்பட்டுள்ளது.

இந்தப் படம் நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த படமா இல்லையா என்பதோ அல்லது இந்தப் படத்தின் கதாநாயகன் ஷாருக்கானா அல்லது வேறு யாரோவா என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மும்பை நகரைக் கலக்கி"யடிக்கிற' சிவசேனைக்கு அச்சப்படாமல் திரையரங்குக்கு வந்துள்ள திரைப்பட ரசிகர்களை வியப்புடன் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாநில அரசு பலத்த பாதுகாப்பு தந்தாலும்கூட, எத்தனையோ வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் அச்சத்தின் காரணமாக வராமல்போய், வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே நடப்பதைக் கண்டவர்கள் எவருமே, இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டால்தான் அரங்கம் நிறைந்த காட்சிகள் சாத்தியமாயிற்று என்று சொல்ல மாட்டார்கள். எந்த வன்முறையையும் எதிர்கொள்வோம் என்ற அறைகூவல்தான், இத்தகைய எதிர்வினைக்கு காரணமாக இருக்கலாம்.

20-20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஓர் அணிக்குப் பங்குதாரராக இருக்கும் நடிகர் ஷாரூக்கான், பாகிஸ்தான் வீரர்களைச் சேர்ப்பது குறித்து தெரிவித்த கருத்தினால் சிவசேனா தலைவர் பால் தாக்கரே அவர் மீது கடுமையான கோபம் கொண்டார்.

ஒரு விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்க முடியாமல், பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றால் ஏதோ தேசத்தையே இழந்தது போன்ற உணர்வைப் புகுத்தியதன் விளைவுதான் இந்த அளவுக்குக் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கியது. இந்த உணர்வுகளை அரசியலாக்கி லாபம் பார்க்க அரசியல் கட்சிகள் முனையும்போது ஏற்படும் சிக்கல்களில் ஒன்றுதான்- ஷாரூக்கான் விவகாரமும், அவரது திரைப்படத்துக்கு எதிர்ப்பும்.

அவர் மீதும் அவர் திரைப்படத்தின் மீதுமான தாக்குதல்கள் இந்தத் திரைப்படம் அரங்கத்தில் திரையிட முடியாத நிலை உருவானபோது, அரங்கம் நிறைந்த காட்சிகள் என்பது சிவசேனாவின் அரசியலுக்கு-அடாவடி அரசியலுக்குக் கிடைத்த சரியான பதிலடி.

அரங்கம் நிறைந்த காட்சிகளுக்கு, முஸ்லிம்கள் அதிக அளவில் திரைப்படம் பார்க்க முன்வந்ததும் ஒரு காரணம் என்பது உண்மையாக இருந்தாலும், ஓர் அரசியல் கட்சி ஒரு கலைக்கு இடையூறாக வரக்கூடாது என்று உணர்த்தும் வகையில் மும்பையில் ஒரு முன்னுதாரணம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இனிமேல், அமிதாப் பச்சன் படத்துக்கோ அல்லது வேறு எந்த நடிகரின் படத்துக்கோ இத்தகைய அதிகாரத் தடைகளை விதிக்க முடியாது என்பதை இந்த ரசிகர்கள் கூட்டம் புரிய வைத்திருக்கிறது.

திரையரங்குகள் நிரம்பி வழிந்ததைக் கேள்விப்பட்டு, அதற்கு இணையதளம் மூலம் பதில் அளித்துள்ள நடிகர் ஷாரூக் கான், நான் வெறுமனே திரைப்படத்தில்தான் ஹீரோ. ஆனால், திரையரங்கத்துள் அமர்ந்திருக்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ, நான் உங்கள் ரசிகன். உங்களுக்கு தேவையற்ற மனஇறுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டேன் என்பதற்காக என்னை மன்னியுங்கள் என்று கூறியுள்ளார். ஆம், உண்மையில் அவர் நடிகர் மட்டுமே. இந்த ரசிகர்கள்தான் ஹீரோக்கள்.

இதேபோன்ற சூழ்நிலைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் படத்துக்கும் ஏற்பட்டது. ஆனால் அதை ரஜினிகாந்த் அரங்கத்துக்கு வெளியே பிரச்னைக்கு தீர்வு கண்டதன் மூலம் எதிர்ப்புகள் கைவிடப்பட்டன. ஒரு வேளை ரசிகர்களின் போக்குக்கே விட்டுவிட்டிருந்தால், தமிழகத்திலும் ரசிகர்கள் ஹீரோக்களாக மாறியிருந்திருக்கக் கூடும்.

தெலங்கானா பிரச்னையின்போது, ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நடிகர்கள் படங்களை தெலங்கானா மாவட்டங்களில் திரையிட கடும் எதிர்ப்பை தெரிவித்தது தெலங்கானா ராஷ்டிரீய சமிதி. நடிகர்கள் வேண்டுகோள் விடுத்தும் மனமாற்றம் இல்லை. இருந்தும் அத்திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. வழக்கத்தைவிட கூடுதலாக , திருட்டு டிவிடி-க்கள் விற்பனையாகின என்பதுதான் உண்மை.

திரைப்படம் மட்டுமல்ல, கவிதை, கதைகள், வீதி நாடகங்கள் எவையும் அதிகாரத்துக்கு கட்டுப்படுவதில்லை. அதன் படைப்பாளியும் சரி, அதைப் படிப்பவன் அல்லது ரசிகன் என்றாலும் சரி, அதிகாரத்தின் வீச்சுக்கு அச்சப்படாமல் எதிர்ப்புக்குரலை உள்வாங்கிக் கொள்வதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.

நெருக்கடி காலத்தில், பேச்சுரிமை கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் வெட்டவெட்ட முளைக்கும் நாக்குமரம் கவிதை, நெருக்கடிக் காலத்தில் எதையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியாதோ அனைத்தையும் பேசியது. அதைத்தான் வாசகர்கள் அதிகமாகப் படித்து ரசித்தார்கள்.

எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் கலையைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சிகளோ ஆட்சியாளர்களோ நினைத்தால், கலை இலக்கியம் கட்டுப்படாது. வெவ்வேறு வடிவங்களில் எழுந்து அதிகாரத்தைப் பார்த்துக் கைக்கொட்டி சிரிக்கும்.

அரசியலுக்கு கலை வசப்படும். ஆனால் அதிகாரத்துக்குள் கொண்டுவர நினைத்தால் கலை கைநழுவும்.

தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக