விடுதலைப் புலிகளின் முன்னாள் நடைமுறைத் தலைநகரமாகிய கிளிநொச்சி நகருக்கு அண்மையில் பயணம் செய்தவர்கள் வழமைக்கு மாறான ஓர் அம்சத்தினை அங்கு அவதானித்தார்கள். குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிந்து உருக்குலைந்துபோன இந்த நகரத்தில் புதியதோர் கட்டடமொன்று நிமிர்ந்து நிற்கிறது.
புதிய மலர்கள் வைக்கப்பட்டிருக்கும், வெள்ளை நிறத்தில் அமைந்த புத்தபகவானின் சிலைதான் அது. 'படையினரைத் தவிர இங்கு வேறெந்தப் பொதுமக்களும் இல்லாத நிலையில் இவ்வாறொரு சிலை எழுப்பப்பட்டிருப்பது விந்தையாகத் தெரிகிறது' என இப்பகுதிக்கு விஜயம் செய்த ஒருவர் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட இந்தப் பௌத்த கோவில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது என இராணுவத்தினர் கூறுகிறார்கள். அடுத்தமாதம் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகிறது. 'இதுவொரு புராதன ஆலயம்' என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கிறார்.
ஆனால், தமிழ் தொல்பொருள் ஆராச்சியாளர்களும், வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் இந்தக் கருத்தினை மறுதலிக்கிறார்கள். கிளிநொச்சி பிரதேசத்தில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களான தமிழர்களே வாழ்ந்து வந்ததாக இவர்கள் வாதிடுகிறார்கள். இதுபோன்ற எந்த பௌத்த ஆலயமும் அங்கிருக்கவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறுகிறார்.
கிளிநொச்சிப் பகுதிக்கான பயணத்தினை இராணுவத்தினர் கட்டுப்படுத்துவதால், சுதந்திர ஆய்வாளர்களின் துணையுடன் இந்தப் பௌத்த ஆலயம் தொடர்பான உண்மை எதுவென ஆராய்ந்து கண்டறிய முடியவில்லை. தமிழர்களது தாயகக் கோட்பாட்டினை இல்லாதுசெய்யும் நோக்குடன் வட பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றும் பரந்துபட்ட ஓர் திட்டத்தின் அங்கமாகவே கிளிநொச்சி நகரில் புத்தருடைய தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் தலைவர்கள் பலர் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
எதிர்வரும் வியாழனன்று இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுமிடத்து வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் விரைவாக முளைவிடும் எனவும் இவர்கள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள்.
'அரசாங்கமானது புதிய பௌத்த விகாரைகளையும் படையினருக்கான வீடுகளையும் கட்டி வருகின்றது. அவர்கள் இப்பகுதி சிங்களவர்களுக்கு உரியது என்று காட்டுவதற்காக இப்பகுதிகளில் குடியேற்றுவதற்கு முயல்கிறார்கள்', என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
தற்காலிக நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்து வசிக்கும் தமிழ் மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப்படுவதற்கு முன்னரே அரசாங்கம் 40,000 படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான வீடுகளை வடக்கில் அமைக்கத் தொடங்கிவிட்டது.
பல ஆயிரம் படைகள் வடக்கில் நிலைகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும் இராணுவத்தரப்பு தமது குடும்பங்கள் குடியமர்த்தப்படுவதென்பதை மறுப்பதுடன் தமது இராணுவ முகாம்களையும் பௌத்த, இந்துக் கோவில்களையும் மீளக்கட்டியெழுப்பி வருவதாக தெரிவிக்கிறது.
'நாம் மக்களைப் பாதுகாப்பதற்கும் மீண்டும் புலிகள் வராமலிருப்பதை உறுதி செய்யவுமே முயற்சி செய்கிறோம்', என்றார் ஜெனரல் சமரசிங்க.
சிறிலங்காவில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்தபோது 19 ஆம் நூற்றாண்டில் தொல்பொருளின் பிறப்புடன் ஆரம்பமாகிய முரண்பாடு மீண்டும் ஆரம்பமாகிறது.
1815 இல் பிரித்தானியர் ஆட்சியைக் கைப்பற்றியபோது, இலங்கையின் புராதன வரலாறு பற்றி அதிகம் தெரிந்திராத அவர்கள் கி.பி. 500 ஆம் ஆண்டளவில் பௌத்த துறவிகளால் எழுதப்பட்ட மகாவம்ச வரலாற்றினால் பெரிதும் கவரப்பட்டார்கள்.
கி.மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் எனும் ஆரிய இளவரசனின் வழித் தோன்றல்களே சிங்களவர்கள் என்றும் அதற்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களே தமிழர்கள் என்றும் இது கூறுகிறது.
இன்றும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற, சிங்கள பேரினவாதத்தை வலியுறுத்தும் இக்கோட்பாடே, தனிநாடு கோரி விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு வழிசமைத்தது.
உண்மையில், சுதந்திரத்திற்குப் பின்னர் வடக்கில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு கிடைத்த அரும்பொருட்கள் கி.மு. 500 ஆம் ஆண்டுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரே தென்னிந்தியாவிலிருந்து மக்கள் வந்திருப்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினர். இதன் மூலம் மகாவம்சம் பொய் என நிரூபிக்கப்பட்டது.
மோதல்கள் ஆரம்பித்தபோது, தொல்பொருள் ஆய்வு முயற்சிகள் கைவிடப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் பல தமிழ் தொல் பொருள் ஆய்வாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துவிட்டனர்.
போர் முடிவடைந்துவிட்டதால், வடக்கின் தொல் பொருள் ஆய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் நாட்டின் புராதன வரலாறு தொடர்பான விவாதமும் ஆரம்பித்துவிட்டது.
'மூன்று தசாப்தங்களாக வடக்கில் எம்மால் எதையும் செய்ய முடியவில்லை', என்கிறார் அரசாங்க தொல்பொருளியல் திணைக்களத்தின் தலைவர் செனரத் திசநாயக்கா.
'ஆரம்ப காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்களது கலாசாம், பொருளாதாரம். சமூகப் பின்னணி, வாழ்க்கைத் தரம் மற்றும் மதம் போன்றன தொடர்பாக நாம் தற்போது அறிந்துகொள்ள முடியும்'.
கடந்த வருடம் வடக்கில் தமது திணைக்களத்தால் 60 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 3 புதிய இடங்கள் கி.மு.300 முதல் கி.பி. 1000 இற்க இடைப்பட்ட காலத்திற்கு உட்பட்டதாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த புதிய இடங்கள் யாவும் ஏன் சிங்கள பௌத்தவாதம் செழித்தோங்கிய காலப்பகுதிக்கு உரியதாக இருக்கிறது என தமிழ் கல்விமான்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர் இந்த வேலை வெளிப்படைத் தன்மையாக இருப்பதற்கு தமிழ் தொல்பொருள் ஆய்வாளர்களும் வெளிநாட்டு வல்லுநர்கள் அல்லது ஐ.நா. நிபுணர்களும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என விரும்புகிறார்கள்.
'தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் அரசாங்கத்தின் கைகளுக்குள்ளேயே இருக்கிறது', என தன்னை இனங் காட்டிக் கொள்ள விரும்பாத தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார்.
'இந்த இடங்களை சிங்களவர்களுடையது என அடையாளங் காட்டி, பல பௌத்த விகாரைகளைக் கட்டியெழுப்பி சிங்கள மக்களுக்கு இதுவே அவர்களது இழந்த நிலம் என்று கூறப் போகிறார்கள் என்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும்'.
கடந்த மாதம் வடக்கிற்கு 300,000 சுற்றுலாப் பயணிகள் சென்றிருக்கிறார்கள் எனவும் அவர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர்கள் எனவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
இனம் அல்லது மதம் தொடர்பான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அரச தொல்பொருள் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள்.
'பௌத்தமும் பௌத்தம் சாராத இடங்களும் சம அளவில் இருக்கவேண்டும் என்பது சிறிலங்கா அரச தலைவரின் அறிவுறுத்தல்', தொல்பொருளாய்வுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் சுதர்சன் செனவிரத்ன.
எவ்வாறிருந்தும் தொல் பொருளாய்வை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்புகின்ற சக்திகளும் இருக்கின்றன என்பதை செனவிரத்ன ஏற்றுக்கொள்கிறார்.
அவற்றுள் முக்கியமானது ராஜபக்சவிடம் அரசாங்கத்தில் கூட்டணியாகவுள்ள, செல்வாக்கு நிறைந்த, பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக கெல உறுமய ஆகும்.
கடந்த மாதம் கொழும்பில் நிகழ்ச்சி நடாத்தவிருந்த பிரபல அமெரிக்கப் பாடகர் அகொனிற்கு விசா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டதிலிருந்து இதன் செல்வாக்கை விளங்கிக் கொள்ளலாம்.
அகொனின் பாடலொன்றுக்கான காணொளியில் பெண்ணொருவர் அரைகுறை ஆடையில் ஒரு நீச்சல் குளத்தைச் சுற்றிப் பாடிக் கொண்டிருந்தார். அதன் பின்னணியில் ஒரு புத்தர் சிலை அமைந்திருந்தது. இதனைச் சுட்டிக் காட்டிய ஆர்ப்பாட்டதாரர்கள், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கும் சிறிலங்கா அரசியலமைப்பு உறுதியளித்திருக்கிறது என்று தெரிவித்தனர்.
இதே ஜாதிக கெல உறுமயவே கடந்த டிசம்பரில் வடக்கில் பல பௌத்த கோவில்கள் கட்டப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 29 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதற்கு சிறிலங்கா அரசதலைவர் உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது.
'ஏற்கனவே இருந்த பௌத்த தலங்களை மீள நிறுவுவதற்கு அவர் உடன்பட்டார். இராணுவமும் தொல் பொருளாய்வு திணைக்களமும் இது தொடர்பாக செயற்படுகிறது', என ஜாதிக கெல உறுமயவின் சிரேஸ்ட உறுப்பினர் தெரிவித்தார்.
இது பொய்யாக இருந்தாலும், தொல்பொருள் ஆய்வு தொடர்பில் ஜாதிக கெல உறுமய நேரடியாகத் தலையிட முடியும். ஏனெனில் அதன் தலைவர் சம்பிக்க ரணவக்கவே சூழல் துறை அமைச்சராக இருப்பதால், பாதுகாக்கப்பட்ட இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு அவரது அனுமதி அவசியமாகும்.
சிறிலங்காவின் தொல் பொருள் ஆய்வுடன் தொடர்புடைய வெளிநாட்டு தொல்லியலாளர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் வேகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
'இந்தப் பிரச்சினைக்கு தொல் பொருளால் தீர்வு காண முடியாது', என டேர்காம் பல்கலைக்கழக பேராசிரியர் றொபின் கானிங்காம் தெரிவித்தார்.
'சிறிலங்காவில் தொல் பொருளாய்வு என்பது எப்போதுமே அரசியலாக இருந்து வருகிறது. இப்போதும் எந்த வேறுபாடும் இல்லை', என்று கூறுகிறார் தனது உறவினர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என அஞ்சி தன்னை இனங்காட்ட விரும்பாத புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் வரலாற்றறிஞர் ஒருவர்.
இக்கட்டுரை TimesOnline இல் வெளியான Archaeology sparks new conflict between Sri Lankan Tamils and Sinhalese என்ற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக